பருத்தித்துறை, துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக் கதவினை உடைத்து வாள்களுடன் உள்நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை ஏற்படுத்தியதுடன் 12 தங்கப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.
சம்பவத்தையடுத்து படுகாயமடைந்தவர்கள் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கு அமைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பலாலி பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும் முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மேலும் ஒர் ஆணும் கொள்ளையிட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டதுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.