மன்னார் மூர்வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத 50 கிலோ நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை மா மூடைகள் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று செவ்வாய்கிழமை (23) கைப்பற்றப்பட்டன. மன்னார் பொலிஸ்
விசேட புலனாய்வு பிரிவு மற்றும் DCDB பிரதேச குற்றபுலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதி வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது உரிய முறையில் களஞ்சியப்படுத்தாத 100க்கும் மேற்பட்ட பாவனைக்கு உதவாத கோதுமை மா மூடைகள் கைப்பற்றப்பட்டன.
கோதுமை மா மூடைகள் களஞ்சியப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதுடன், அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த நபர் மன்னார் நகர் பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருவதுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவும் தனது பேக்கரியில் பாவனைக்கு உதவாத மா மூடைகள் களஞ்சியப்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டு சுகாதார பரிசோதகர்களால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதே நேரம் வரும் நாட்களில் மன்னார் நகர் பகுதிகளிலுள்ள பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் அவற்றின் களஞ்சியசாலைகள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.