கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்கும் 13 வயது மாணவனின் சப்பாத்துக்குள் நாகபாம்பு குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. நேற்றுக் காலை 5.50 மணியளவில் பாடசாலைக்கு செல்வதற்காக அவசரம் அவசரமாக அந்த மாணவன் சப்பாத்தை அணிந்துகொண்டு பாடசாலை வானில் பயணித்துள்ளார்.
ஆசனத்தில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே வலது காலில் ஊசியொன்றினால் குத்துவது போன்ற வலியை அந்த மாணவர் உணர்ந்துள்ளார்.
அவர் அரை மணி நேரத்தின் பின்னர் வகுப்பறைக்குச் செல்லும்வரை சப்பாத்தைக் கழற்றவில்லை.
அதன் பிறகு வகுப்பறையில் வைத்து சப்பாத்தை கழற்றிப் பார்க்கும்போது அதற்குள்ளிருந்து சிறு நாகபாம்பு குட்டியொன்று வெளியே வந்துள்ளது.
அந்த நாகபாம்பு குட்டி 07 அங்குல நீளம் கொண்டது எனவும் அதனைக் கண்ட வகுப்பறையின் ஏனைய மாணவர்கள் அது இறப்பர் பாம்பு எனக் கருதி அந்த சிறுவனை பரிகாசம் செய்துள்ளனர்.
உண்மையைக் கண்டறிந்தபின் அந்த மாணவன் உடனடியாக பொரளை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. விஜேசூரியவிடம் அதுதொடர்பில் வினவிய போது, மாணவனின் உடலில் விசம் ஏறவில்லை என்பது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 24 மணி நேரம் அந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், மாணவன் சிறந்த உடல்நிலையுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் மாணவனின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில், வீட்டுக்குள் அவ்வாறான தீங்குவிளைவிக்கக்கூடிய உயிரினங்கள் வருவதற்கான வாய்ப்பில்லையென்றும் எவ்வாறெனினும் இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொதுவாக சப்பாத்துக்களை அணியும்போது அதன் உட்பகுதியை முறையாக கண்காணித்த பின்னர் சப்பாத்துக்களை அணியுமாறு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.