டொலர் நெருக்கடி நிலை காரணமாக இரண்டு பெரிய கோதுமை மா நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தமையே கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணமாகுமென்றும் எதிர்காலத்தில் பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், இரண்டு பெரிய நிறுவனங்கள் போதுமான அளவு கோதுமை மாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
சந்தையில் கோதுமை மாவுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டது.அதன் காரணமாகவே ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. எனினும் இரண்டு பெரிய நிறுவனங்களும் போதுமான அளவு கோதுமை மாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.