ஒழுக்கத் தகுதிகள் இல்லாத வெற்றிகள் நாட்டுக்கு விழுப்பம் அளிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எல்லாத் துறைகளுக்கும் அடிப்படையான பாதுகாப்புக் கவசமாக இருப்பது ஒழுக்கமாகும். அந்தத் தகுதி இருந்தால்தான் ஒவ்வொரு துறையிலும் நம்பகமான நிலையான வெற்றிகளை நிலைநாட்ட முடியும்.
உலகளாவிய ரீதியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஒரு கௌரவமான கணிப்புக் காணப்பட்டது.
அந்தக் கணிப்பை உச்சப்படுத்திய வீரராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவைக் குறிப்பிடலாம்.
1996 இல் எமது கிரிக்கெட் அணி உலகச் சாம்பியனானது. அதற்கு விளையாட்டுத் தகைமை ரீதியாகவும், ஒழுக்கத் தகைமை ரீதியாகவும் சிறப்பான வழிகாட்டலை அவர் செய்திருந்தார்.
தற்போது 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி – 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட தனுஷ்க குணதிலக பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபட்டு நாட்டுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
விளையாட்டுத்துறைக்கு உடல் தகுதி மட்டுமல்ல, ஒழுக்கத் தகுதி என்பதும் அவசியமானது என்பதை விளையாட்டு வீரர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று எமது நாட்டில் அரசியல், சட்டம், நிர்வாகம், நீதி, நிதி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் என்று பல துறைகள் காணப்படுகின்றன. இந்தத் துறைகளில் பணியாற்றுமோர் ஒழுக்கத் தகுதிகளை இழந்தால் அவர்களது ஏனைய தகுதிகள் பூச்சியமாகி விடுகின்றன. பூச்சியத்தால் எந்தப் பெரிய இலக்கத்தைப் பெருக்கினாலும் அது பூச்சியமாகிவிடும்.
அது போன்றுதான் எந்தப் பெரிய சீமானும் ஒழுக்கத்தில் பூச்சியமானால் எல்லாவற்றிலும் பூச்சியமாகி விடுகின்றான்.
இறுதிப் போரின் போது படையினர் சிலர் பாலியல் குற்றம் இழைத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் பாலியல் குற்றம் இழைத்த அரசியல்வாதிகள் பற்றியும் கூறப்படுகின்றன. மேலும் ஏனைய துறைகளிலும் பாலியல் குற்றவாளிகள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான குற்றவாளிகள் ஒரு சிலர் இருந்தாலே அத்துறைகள் களங்கமாகி விடுகின்றன.
‘அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்’ என்பது பொய்யாமொழி வாக்காகும். ஒருவர் எத்துணை வல்லவராக இருந்தாலும் பண்பு கெட்டவராயின் வெறும் மரமாகவே கணிக்கப்படுகின்றார்.
இன்று எமது நாடு போர்க்குற்றம், பொருளாதாரக் குற்றம், மனித உரிமைக் குற்றம், அரசியல் குற்றம் என்று பல குற்றங்களைச் சுமப்பதற்கும் ஒழுக்கத் தகுதிகள் அற்றுப் போனமையே காரணமாகவுள்ளது. ‘
‘ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஆழக்கம் உயிரிலும் ஓம்பப்படும்’ என்பதும் பொய்யாமொழி வாக்காகும். ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.
எனவே, இலங்கை நாட்டுக்கு ஒழுக்கக் கல்வி என்பது மிக முக்கியமானதொன்றாகும். அதுவும் ஒழுக்க வழி காட்டுவதற்குப் புறப்பட்ட மதத்துறவிகள் பாலியல் குற்றங்கள் புரிந்து சிறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.
ஒழுக்கமற்ற எந்தக் கல்வியோ, துறையோ வெற்றியடையாது. அப்படியான ஒழுக்க மற்றவர்களால் வழிநடத்தப்படும் நாடும் வெற்றி அடைவதில்லை என்பதுதான் யாதார்த்த உண்மையாகும்.
ஒழுக்க ரீதியாகக் குற்றமிழைத்த சிலர் அரசியல் அதிகாரக் கவசத்தால் பாதுகாக்கப்படுவதாலும், அவர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்படுவதாலும் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அதிகரிக்கின்றன.
அதிகாரம், பணம், பதவி என்கின்ற பலங்களின் பின்னால் பல ஒழுக்கமற்ற செயல்கள் நடைபெறுகின்றன. சட்டம் சிலந்தி வலையாகப் பலவீனம் அடைந்தால், அதில் பலவீனமான உயிரிகள் சிக்குகின்றன. பலமான குளவிகள், வண்டுகள் சட்டவலைகளை அறுத்துத் தப்புகின்றன. இதனால் குற்றங்கள் மலிகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர்” – என்றார்.