கொழும்பு, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்று கொஹுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோணபொல,கந்தேவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நோயாளர் தொண்டை புற்றுநோய் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் மூன்று மாதங்களாகத் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நான்காவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி இன்று அதிகாலை 5.30 மணியளவில், சிகிச்சை அறையில் உள்நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு உணவு உண்பதற்காகச் சென்று, அங்குள்ள ஜன்னலில் இருந்து கீழே குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.