அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு 2023.02.01 ஆம் திகதியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்’ என்று கடந்த சர்வகட்சிக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், புராதன, வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்று மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்படக்கூடிய சிக்கல், பாதகமான நிலையைக் கருத்தில்கொண்டே ஏற்கனவே ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்துக்கொண்டனர் என்றும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, மத்திய அரசின் இறைமையைச் சீர்குலைக்கும் இத்தகைய அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கான காரணமாக அமையும் என்றும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதர நெருக்கடியால் பிராந்திய, உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மையை விபத்தில் ஆழ்த்தும் இத்தகைய பிரேரணைகளை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.