ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்துள்ளார்.
பதுளை – மடுல்சீமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது எனப் பின்னர் அறியப்படுத்தி இருந்தார் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சஜித் பிரேமதாஸ பங்கேற்றார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இந்தச் செயற்பாடு தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பசறை தொகுதியின் பிரதம அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக வடிவேல் சுரேஷ் மேலும் கூறினார்.