யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் எருவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையில் பணிபுரியும் சத்தியநாதன் சத்தியானந்தன் (வயது 34) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் வான் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த வடமராட்சி, புலோலியைச் சேர்ந்தவர்களான சிவசுப்பிரமணியம் சுதாகரன் மற்றும் கருணாமூர்த்தி விமலாதேவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.