“நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். கடன் பெற்ற அரசுகளின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைத் தவிர்த்து சிறந்த மாற்றுத்திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அதனை விரைவாகச் செயற்படுத்தத் தயார்.”
– இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் மேலும் உரையாற்றியதாவது:-
“பொருளாதாரப் பாதிப்பு ஓரிரு நாட்களில் இடம்பெற்றதொன்றல்ல. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு தரப்பினரது ஆலோசனைக்கு அமைய வரிச் சலுகை வழங்கினார். உரம் தொடர்பில் தவறான தீர்மானத்தை எடுத்தார். பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது.
75 ஆண்டு கால ஆட்சியாளர்கள் திருடர்கள், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் என அரசியல் நோக்கத்துக்காகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
காலத்துக்குக்காலம் பொருளாதாரக் கொள்கையை அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைத்ததால் நாடு என்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம். 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியிருந்தது. தற்போது வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் 17ஆவது தடவையாக ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம்.” – என்றார்.