நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா – சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுண் தாலியுடன் கூடிய மாலை மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றது என்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டைப் பொறுப்பேற்ற நோர்வூட் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்டப் பகுதிக்குச் சென்று தடயவியல் பொலிஸாரை வரவழைத்து விசாரணைகளை ஆரம்பித்தபோது பணம் களவாடப்பட்ட நிலையில் வெறும் உண்டியல், கத்தி ஒன்று என்பன தேயிலை மலையில் இருந்து மீட்கப்பட்டன.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தோட்டப் பகுதிக்குக் ஹட்டனில் இருந்து ‘பெட்டிமா’ என்ற பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பொலிஸ் மோப்பநாய் உண்டியல் இருந்த தேயிலை மலையில் இருந்து நேரடியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சென்று அமர்ந்துகொண்டது.
அதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆலயத்தின் பூசகரைக் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.