முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் அகழ்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசேட வழக்கிலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டநீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் நடந்த விசேட வழக்கில் முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி க. வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், வி கே. நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா, வி.எஸ். தனஞ்சயன் , காணாமல்போனோர் தொடர்பான பணிமனையின் சட்டத்தரணிகளான எஸ்.துஷ்யந்தினி, ஜெ. தர்பரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா. சண்முகதாசன், கிளிநொச்சி – முல்லைத்தீவு பிராந்திய பொலிஸ்மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்கிளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
அகழ்வுப் பணியை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 29ஆம் திகதி குடிதண்ணீர் விநியோகத்துக்காகக் கிடங்கு வெட்டியபோது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் திகதி நீதிமன்றின் அனுமதியுடன் தோண்டப்பட்டபோது 13 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு நீதிமன்றின் அனுமதியுடன் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.