“கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போதும், அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போதும் பல கொடுமைகளை எங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்திருக்கின்றார். பல இன்னல்களையும், மனித உரிமை மீறல்களையும் அவர் செய்துள்ளார். அவரும், அவரின் குடும்பத்தினரும் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சர்வதேச விசாரணையில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை எனத் தென்னிலங்கைத் தலைவர்கள் கோரும் நிலையில், குறிப்பாக ஒரு விடயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அதில் முன்னாள் பெண் போராளிகளின் எச்சங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகின்றது. இதற்கும் சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தென்னிலங்கைத் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் மௌனம் சாதிக்க முடியாது.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளன. இப்படி ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களைக் கண்டுபிடித்து கிடப்பில் போடும் நிலைதான் காணப்படுகின்றது. ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தைச் செலுத்த வேண்டும்.
வடக்கில் புத்த கோயில்கள் அமைப்பதற்கும், பௌத்த விகாரைகளை நிறுவதற்கும் இராணுவம் பல இடங்களைப் பிடிப்பதற்குக் காரணங்கள் எல்லாம் அவர்கள் பிடிக்கின்ற இடங்களைத் தோண்டுகின்றபோது எங்களது மக்களின் மனித எச்சங்கள் உள்ளன. அந்த விடயத்தை மறைப்பதற்காகவே சட்டவிரோத நில அபகரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது என நான் சந்தேகப்படுகின்றேன்.
ஆகவே, இந்த விடயத்தில் ஒட்டுமொத்த சிங்களத் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும். சர்வதேச விசாரணையைத் தமிழ் மக்கள் கோருகின்றார்கள். அந்தவகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும் வகையில் தென்னிலங்கையில் உள்ளவர்களும் மனச்சாட்சியின்படி நடக்க வேண்டும்.” – என்றார்.