தமிழினத்தின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த வீரமறவர்களுக்கு – மாவீரர்களுக்கு – உயிர்க்கொடையாளர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்றுத் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வாக நடைபெற்றன. தாயகத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் உறவுகளின் கண்ணீரால் நனைந்தன.
வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் கடந்த ஒரு வாரமாகப் பொலிஸார் செயற்பட்ட போதிலும் மக்கள் இவற்றைக் கண்டு அஞ்சாமல் வீரமறவர்களுக்குத் துணிவுடன் துயிலும் இல்லங்களுக்குச் சென்று சுடரேற்றினர்.
வடக்கு – கிழக்கில் உள்ள நீதிமன்றங்களும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கியிருந்தன. நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருந்தன.
தாயகத்தில் உள்ள அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் நேற்று மாலை சமநேரத்தில் சுடர்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், பொது இடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் நேற்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
சிவப்பு, மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மாவீரர் எழுச்சிக் கீதங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஒலிக்கவிடப்பட்டிருந்தன.
நேற்று மாலை 6.05 இற்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 6.06 இற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 இற்கு ஈகச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்கள் நினைவான ஈகச் சுடர்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. அதனைத் தொடர்ந்து, மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. பாடல் இசைக்கப்பட்டபோது, மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உயிர்நீத்த தமது சொந்தங்களை நினைத்துக் கதறி அழுதனர். அந்தக் காட்சி அங்கு கூடியிருந்தவர்களை நிலைகுலைய வைத்தது.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்று பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.