இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகருமான பவதாரணி உடல்நலக்குறைவால் நேற்று இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.
பவதாரணி கடந்த 5 மாதங்களாகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று கூறப்படுகின்றது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்திருந்த அவர், இங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே நேற்று மாலை கொழும்பில் காலமானார்.
சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக பவதாரணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் மற்றும் உறவினரான வெங்கட் பிரபும் இன்று அதிகாலை கொழும்பு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு வந்த இளையராஜாவுடன் தற்போது தங்கியுள்ளனர்.
கொழும்பில் உள்ள ஜயவர்த்தன மலர்ச்சாலையில் பவதாரணியின் பூதவுடல் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இளையராஜாவால் கொழும்பில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியும் பிற்போடப்பட்டுள்ளது.