தமிழ் மக்களுடன் கனடா என்றும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றது என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனேடியத் தூதுவரைக் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு கூறினார் என்று சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காகச் சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளார் என்றும் உறுதியளித்தார்.