செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘அறிவிலி’ கோட்டாவே பொய் சொல்லாதீர்! – மனோ பதிலடி

‘அறிவிலி’ கோட்டாவே பொய் சொல்லாதீர்! – மனோ பதிலடி

2 minutes read
“சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் ஒன்றுதிரண்டு அரகலவை நடத்தினார்கள் என்று தன் நூலில் கூறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வரலாற்றுக் குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“சிங்கள – பெளத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பெளத்த தரிசனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள – பெளத்த சிந்தனையைப் பலப்படுத்தி வருகின்றேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை?” – என்றும் மனோ எம்.பி. கேள்வி எழுப்பினார்.

“இந்நாட்டில் சிங்கள – பெளத்தம்,  பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கைப் பன்மைத்துவதை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் அரகலயவுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது” – என்றும் மனோ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள ‘சதி’ என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்துக் கூறிய மனோ எம்.பி. மேலும் குறிப்பிட்டதாவது:-

“கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்குபற்றிய மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள். அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதாரக் கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதிக் கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களைக் காணவில்லை.

எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால் நடத்தப்பட்டது ஆகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது. இதுதான் உண்மை. சிங்கள – பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி,  உண்மையைத் திரிபுபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கடுமையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More