ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வரிசையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே கலந்துகொண்டார். வேறு எந்தவொரு அரசியல்வாதியும் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை.
இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது:-
“பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட நேற்று நாங்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். அதிலே சிவில் சமூகத்தினர் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பங்கு பற்றினார்கள். ஆனால், பலவித காரணங்களால் அரசியல் தலைவர்களால் வர முடியாமல் போய்விட்டது.
ஆனால், சிறிதரன் எம்.பிக்கு இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு விருப்பம் இருந்தது. எனினும், வவுனியாவில் ஒரு கூட்டம் மற்றும் கிளிநொச்சியில் ஒரு கூட்டம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடு சென்றிருக்கின்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் வருவதாகக் கூறினார். ஆனாலும், அவராலும் வர முடியாமல் போனது.
இவ்வாறான சில பிரச்சினைகள் இருந்ததால் அரசியல்வாதிகள் அதிகம் வரவில்லை. நான் மட்டும்தான் ஒரு அரசியல்வாதியாக இருந்தேன். ஆனால், சிவில் சமூகத்தினர், ஊடகத்தினர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் இங்கே வந்திருந்தார்கள்.
வந்திருந்தவர்களிடத்தே பொது வேட்பாளர் சம்பந்தமான கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்தோம். அதாவது வந்திருந்த எல்லோருமே பொது வேட்பாளரை நிறுத்துவதன் அவசியம் தற்போது தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்பதைக் கூறி அதை ஏற்றுக்கொண்டார்கள்.
இனி அடுத்த கூட்டத்திலே நாங்கள் கூடி இதிலே அரசியல் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு அதிகளவிலான சிவில் சமூகத்தினரையும் இணைத்துக்கொண்டு அதாவது தமிழ் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கக் கூடியவர்களையும் உள்வாங்கி அவர்களினூடாக இது சாத்தியமான விடயமா? இதைச் செய்வதற்கு எல்லோரும் ஆதரவு தருவார்களா? போன்ற பல விடயங்களைப் பேசவிருக்கின்றோம்.
இந்த முயற்சியின் ஆரம்பகட்டமாக ஒரு சில விடயங்களை நாங்கள் நேற்று பேசியிருக்கின்றோம். குறிப்பாக நாங்கள் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுக்கக் கூறியபோது அவருக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இருக்கின்றார்களா என்றொரு கேள்வி பல்கலைக்கழக மாணவர்களுக்கு எழுந்தது.
அதற்கு நாங்கள் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை. முதலில் பொதுக் குழுவைக் கூட்டி பொதுக் குழுவில் இருந்து ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுப்போம் என்று கூறியபோது அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்திருந்தது.
ஆக இவ்வாறான சில சில கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நாங்கள் பதில்கள் வழங்கிக் கொண்டிருந்தோம். இது சம்பந்தமாக அவர்கள் எல்லோருக்கும் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது.
இதுதான் நேற்று நடந்தது. அதாவது பூர்வாங்க ஆராய்வுதான். அந்த ஆராய்வின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திடமான ஒரு கருத்து எல்லோரிடமும் காணப்பட்டது. இனி அது எந்தளவுக்கு வலுவுறும் என்பது அடுத்த கூட்டத்தில்தான் தெரியவரும்.
ஆனால், எங்களுடைய பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதன் காரணத்தால் என்னென்ன நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆராய்ந்து அறிந்தோம்.
அதாவது பொது வேட்பாளர் வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவார். தமிழ் மக்களின் ஐக்கியத்தை நிலைநிறுத்துவார். சிங்கள மக்களுடன் பேசி தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய மயக்கங்களைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும். வெளிநாட்டு அரசுகளுக்கு எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக்கூறக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு பலவிதமான விடயங்களை ஒரு பொது வேட்பாளரூடாக நாங்கள் செய்யக் கூடியதாக இருக்கும். அதற்குத்தக்க ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு கூட்டத்தையும் வெகுவிரைவிலே நடத்தவிருக்கின்றோம்.
மேலும் இதில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவ்வாறான பேச்சுக்களை நாங்கள் இப்போது பேச விரும்பவும் இல்லை. அது நாங்கள் செய்யக் கூடிய ஒன்றல்ல. அதாவது சகலரையும் இணைத்துக்கொண்டு பொதுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தப் பொதுக் குழுவைக் கூட்டி அவர்களுக்கூடாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான முறையென்று நாங்கள் கருதுகின்றோம்.
தெற்கிலிருந்து தமிழ் மக்களைத் தற்போது பலரும் நாடி வருகின்றார்கள். அவ்வாறு நாடி வருவது மட்டுமல்ல தமிழ் மக்களின் வாக்குகளை எவ்வாறு பெற்றுத் தருவீர்கள் என்று ஆங்காங்கே எங்களிடத்தே கேட்கின்ற நிலையில் இவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.
அதாவது இதுவரை காலமும் அதைப் பெற்றுத் தருவோம், இதைச் செய்து தருவோம் என்று கூறிவிட்டு எதுவுமே தரவில்லை. அவ்வாறு எதனையும் அவர்கள் தரவும் மாட்டார்கள். இவ்வாறான நிலைமையில்தான் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது நீங்கள் எதனை எங்களுக்குத் தரப் போகின்றீர்கள் என்றால் அதனை எழுத்திலே தர வேண்டும். அவ்வாறு எழுத்திலே நீங்கள் தருவதை இராஜதந்திர மட்டத்திலே அதாவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் மத்தியிலே எழுத்தில் தந்தால்தான் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக எங்களுடைய பொது வேட்பாளரை நாங்கள் போட்டியிலிருந்து வெளியேற்ற மாட்டோம். மாறாக விருப்பு வாக்கை அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தலாம். ஆகவே, ஒவ்வொருத்தரும் இது சம்பந்தமாக என்ன சொல்ல இருக்கின்றார்கள், என்ன தர இருக்கின்றார்கள், எப்படி அதனைச் செய்யப் போகின்றார்கள் என்பதைப் பார்த்து அதனை எழுத்தில் வாங்கி அடுத்த கட்டத்துக்கு நாங்கள் செல்லவிருக்கின்றோம்.” – என்றார்.