செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர் நாம் திடசித்தத்துடன் முன்நகர்வோம்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

தமிழர் நாம் திடசித்தத்துடன் முன்நகர்வோம்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

3 minutes read
“வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது. தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன் சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், இராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழின அழிப்பிலிருந்து தாயகத்தின் ஓர் அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது.

* ஈழத்தமிழ் மக்களை அரசியல்படுத்தி அணிதிரட்டுதல்.
* போருக்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல்.
* வடக்கு – கிழக்குக்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல்.
* அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல்.
* பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல்.
* வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல்.
* அதிகாரப் பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புக்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல்.

ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச்  சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்கள் எதனையும் சாதித்திராத தமிழ் அரசியல் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியல் கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற இலங்கையின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த இலங்கையின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக் கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம்.

இனியாவது ஏமாற்று கபட அரசியலுக்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியல் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம்.

சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள்,

* இலங்கையின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல்.
* இலங்கையின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்  என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல்.

இலங்கையின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இரு வேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொது வேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும்.

பொது வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.

* இலங்கையின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல.

* பொது வேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொது வேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

* பொது வேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல.

* பொது வேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.

* தமிழ் மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே, இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது.

* பொது வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும்.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக் குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது. தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More