செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் கோமாளிக் கூத்து! – யாழில் சுமந்திரன் கருத்துரை

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் கோமாளிக் கூத்து! – யாழில் சுமந்திரன் கருத்துரை

4 minutes read
“தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதற்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் கடுமையான பிரசாரம் செய்ய வேண்டும். அதனைத் தோற்கடிக்க வேண்டும். இது யாரோ ஒருவருடைய கோமாளிக் கூத்து என்பதை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். துரோகிப் பட்டத்துக்குப் பயந்து எவரும் ஓடக்கூடாது.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்’ எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சுமந்திரன் எம்.பி. கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய காலகட்டத்திலே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு தரப்பினர் என்னோடு வந்து உரையாடியபோது, இப்படியாக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றேன் என்று கூறி அவர்களையும் இதில் பங்குகொள்ளுமாறு அழைத்திருந்தேன்.

இது நல்ல விடயம். நிச்சயமாக பொது வெளியிலே பேசப்பட வேண்டிய விடயம் என்று கூறியதுயடன் தாங்கள் கலந்துகொள்வதாகவும் எனக்கு அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள்.

இதன் பின்னர் அவர்களிடத்தே பேச்சாளர்களாக அழைத்தபோது இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை என்றும், அந்த நேரம் தனக்குப் பொருந்துமோ தெரியாது என்றும் ஒருவர் கூறினார்.

அப்படியானால் சனிக்கிழமை காலை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை உங்களுக்கு வசதியா என்றும், உங்களுக்கு ஏற்ற வசதியான நேரத்தைச் சொல்லுங்கள் என்றும் அவரிடத்தே கேட்டபோது, தான் ஒரு குழுவைச் சார்ந்தவன் எனவும், அந்தக் குழு இந்த நிகழ்வுக்குப் போகக் கூடாது எனத் தீர்மானமொன்றை எடுத்திருக்கின்றது எனவும், ஆகையால் இதற்குத் தன்னால் வரமுடியாது எனவும் கூறினார். அந்தக் குறுஞ்செய்தி என்னுடைய தொலைபேசியில் இப்போதும் இருக்கின்றது.

என்னிடம் வந்த அந்தக் கூட்டத்திலே ஏழு, எட்டுப் பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இது நல்ல விடயம் என்று சொன்னவர்கள் என்பதால் ஒருவர்தானே வரமுடியாது எனக் கூறியிருக்கின்றார் என்ற காரணத்தால் இன்னுமொருவரிடத்தே கேட்டேன்.

அவர் சொன்னார் இந்த நிகழ்வுக்குப் போகக்கூடாது என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது என்றும், ஆனால் உங்களுடைய முயற்சி நல்ல முயற்சி என்றும், திரும்ப ஒரு தடவை அவர்களிடத்தே கேட்டுப் போட்டு சொல்வதாகவும் கூறினார். அப்படி கேட்டுப் போட்டு இரண்டுநாள் கழித்து தன்னால் இதற்கு வர முடியவில்லை என்று அவர் கூறினார்.

இதன் பின்னர் அந்தக் கூட்டத்திலே பங்குபற்றாமல் இருந்த இன்னும் இரண்டு பேரிடத்தே கேட்டிருந்தேன். அதில் ஒருவர் இதைப் பற்றியெல்லாம் பிரபலமாக எழுதுகின்ற பத்தி எழுத்தாளர். அவர் சொன்னார் நீங்கள் செய்கின்ற இந்த விடயம் நல்லது. ஆனால், தானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன். ஆகையினால் தன்னாலும்  இதற்கு வர முடியாது என்று கூறினார்.

சரி பரவாயில்லலை. அந்தக் குழுவைச் சேராத அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடத்தே கேட்டிருந்தேன். உண்மையில் இந்தக் கூட்டம் கடந்த மே 26 ஆம் திகதி நடைபெற இருந்தது. அதற்கு அவர் வருவதை உறுதி செய்திருந்தார். இந்த நிகழ்வை ஜூன் 9 ஆம் திகதிக்கு மாற்றியபோதும் அவர் வருவதை உறுதி செய்திருந்தார். ஆனால், இன்றைய நேரத்தை அவருக்கு அறிவித்த போது எனக்கொரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அதாவது தங்களுடைய கட்சியின் அரசியல் குழு நாளை காலை கூடுகின்றது என்றும், அதற்குப் பிறகு உங்களுக்குச் சொல்லுகின்றேன் என்றும் அவர் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இரண்டு நாள் பின்னர் “மன்னித்துக்கொள்ளுங்கள், என்னால் வர முடியாது” என்று அவர் கூறினார்.

இதில் எவருடைய பெயரையும் நான் சொல்லவில்லை. அது ஏன் என்றால் நாகரிகம் கருதி அதனை நான் செய்யவில்லை. ஆகவே, இதில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இப்படி இவர்கள் ஒளித்து ஓடுவதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

கருத்துக்கள் இருந்தால் அந்தக் கருத்துக்களை மக்கள் முன் வைப்பதுதான் ஐனநாயகம். கருத்துக்களைக் கருத்துக்களால் மோத வேண்டும். கருத்துச் சொல்லுவதற்கு சுதந்திரம் இல்லை என்று சொன்னால் அது பாசிசவாதம்.

எதையும் சரியான விதத்திலே நாங்கள் அடையாளம் காண வேண்டும். கருத்துச் சொல்லக் கூடாது என்று தடை விதிப்பது பாசிசவாதம். இது மிகவும் வருத்தத்தக்க விடயம். அப்படி ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி மக்களோடு சேர்ந்து பகிர்ந்து உரையாற்றுவோம் என்று சொல்லுகின்ற போது அதை முன்கொண்டு செல்வதற்காக இருக்கின்றவர்கள் ஏன் தங்களைப் பாசிசவாதிகளாக அடையாளம் காட்டிக்கொள்கின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆகவே, அவர்களைப் பற்றி கதைத்து இந்த நேரத்தை வீணாக்கக் கூடாது.

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் என்று சொல்லி 2024 ஆம் ஆண்டு நாங்கள் பேசத் தொடங்கவில்லை. கடந்த 1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டிலே பொது வாக்கெடுப்பு என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் இப்பொது செல்லுகின்ற இடமெல்லாம் இந்தப் புத்தகத்தைக் கொண்டு திரிகின்றேன். இதுதான் எங்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பிரசுரிப்பு ஆகும். அதில் பல விடயங்கள் இருக்கின்றன.

இங்கு பல்வேறு விடயங்களைப் பலரும் பேசியிருப்பதால் இதனை மக்கள் பகுத்தறிந்து தீர்மானம் எடுக்கப்  போதுமானதாக இருக்கின்றது. ஆனால், சில சரித்திர விடயங்களைச் சொல்ல வேண்டும். அந்தச் சரித்திரங்கள் இந்தப் பிரசுரிப்பில் முழுவதுமாக இருக்கின்றன.

நாங்கள் ஒருமித்த மக்களாக எங்கள் மக்களின் ஆணை 70 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஒரு அதிகாரப் பகிர்வுக்கானது என்பதை இனியும் நிறுவத் தேவையில்லை. அது நிறுவப்பட்டு விட்டது.

இப்போது தொடங்கியுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் ஒரு விஷப் பரீட்சை என்று நான் கூறுகின்றேன். ஒரு விஷப் பரீட்சையில் நாங்கள் ஈடுபட்டு அசைக்க முடியாத இந்த மக்கள் ஆணையை இல்லை என்று நிறுவ முற்படக்கூடாது.

ஏனென்றால் அதற்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இது ஒரு பொது வாக்கெடுப்பு அல்ல. இது சமஷ்டிக்கான வாக்கெடுப்பும் அல்ல. இது வேறு விடயம்.

இந்த நிகழ்வுக்கு எல்லாப் பேச்சாளர்களிடத்திலேயும் நான்தான் பேசி அவர்களை அழைத்து இருந்தேன். இந்த நிகழ்ச்சி சரியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் எல்லாப் பக்கக் கருத்துக்களும் சரியாக வெளிவர வேண்டும் என்பதால் இங்கே வந்து கருத்துக்களைச் சொன்னவர்களுக்கு நன்றி.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்றால் நாங்களே எங்களுக்குச் சொந்தக் காசில் சூனியம் வைப்பது போல் இருக்கும்.

2010 ஆம் ஆண்டும் ஜனாதிபதித் தேர்தல் வந்தபோதும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வந்தது. இது சம்பந்தமாக சம்பந்தனையும் கேட்டார்கள்.

அப்படி 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்தக் கருத்து வந்தது. அதேபோல் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் இப்போது இருக்கின்ற சில சிவில் சமூகத் தலைவர்கள் போல் அன்றைக்கு சமயத் தலைவர்கள் கூட்டாக வந்து  நீங்கள் தமிழ்ப் பொது வேட்பாளராக நில்லுங்கள் என்று சம்பந்தனிடம் கேட்டார்கள். அதனை அடியோடு சம்பந்தன் மறுத்து விட்டார்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கமிடம் நாங்கள் ஒரு விடயத்தைக் கேட்கின்றோம். அதாவது நீங்கள் இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற காரணத்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றதால் அதனைச் செய்யுங்கள். அப்படி முதலில் அதனைச் செய்து காண்பியுங்கள் என்றுதான் அவரிடம் கேட்கின்றோம்.

நாங்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக்கூடாது.  ஏற்கனவே 2005 ஆம் ஆண்டில் பகிஷ்கரித்ததையும் நாங்கள் பார்த்திருந்தோம். அதன் விளைவுகளையும் சந்தித்திருந்தோம்.

ஆகையினால், பிரதான மூன்று வேட்பாளர்களுடனும் நாங்கள் பேச்சு நடத்த வேண்டும். அவர்களில் ஒருவரை ஆதரிக்க முடிவெடுக்க வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More