ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு கொழும்பு – தெமட்டகொடை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரைக் கறுப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவால் இன்று அறிவிக்கப்பட்டது.
ஹிருணிகா மீதான 18 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அமிலபிரியங்கர அமரசிங்க என்ற இளைஞரை, தமது பாதுகாவலர்களை ஈடுபடுத்தி, கடத்திச் சென்றதுடன் அதற்கு ஆதரவு அளித்தக் குற்றச்சாட்டின் கீழ், ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பாதுகாவலர்கள் ஒப்புக்கொண்டனர்.
முதல் கட்டத்திலேயே அவ்வாறு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர்களுக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை உத்தரவைப் பிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் பணித்துள்ளார்.
இந்த வழக்கில் மூன்று வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேநேரம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யப்படும் என்று ஹிருணிகாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.