செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “அரசியல் உரிமையைப் பெற மக்கள் ஆணையே எமக்கு வேண்டும்!”

“அரசியல் உரிமையைப் பெற மக்கள் ஆணையே எமக்கு வேண்டும்!”

2 minutes read

“சர்வதேச சமூகத்திடம் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவது, அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, அவற்றுக்காகப் பேரம் பேசுவது ஆகியவற்றைத் தேர்தல்களில் எமது மக்கள் வழங்கும் மக்கள் ஆணையால் கிடைக்கும் எமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயகப் போராடங்களையும் முன்னெடுத்துப் பெற்றுக்கொள்ளும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாகச் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுடன் நடத்தி வரும் சந்திப்புகள் பற்றி மனோ கணேசன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் பெறுகின்ற இந்த அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றைப் பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென்மேலும் செழுமைப்படுத்த அவசியமான அபிவிருத்தி, வளர்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவப் பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது இந்த நிலைப்பாடு, எமக்கு மட்டும் சாதகமானது அல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் தொல்லை இல்லாமல் சாதகமானது என நான் மிகத் தெளிவாக நேற்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்தேன். அதையே நேற்றுமுன்தினம்  இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேவிடமும் கூறினேன்.

உலகம் இன்று மிக வேகமாக மாறி வருகின்றது. உலக ஒழுங்கமைப்பு என்பது பலம் வாய்ந்த நாடுகளின் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எமது மக்களின் அரசியல் துன்பங்கள், துயரங்கள் பெரிய நாடுகளுக்குப் பொருட்டாகத் தெரிவதில்லை. இலங்கை உட்பட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பாக உலக ஒழுங்கமைப்பு பலம் வாய்ந்த நாடுகளால் தமது நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நாம் உலக நாடுகளை அணுகி எமது அரசியல் போராட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். இந்நாட்டுப் பிரதிநிதிகளும் இவற்றைப் பொறுமையாக கேட்கின்றார்களே தவிர எமக்காக அரசியல் போராட்டங்களை அவர்கள் முன்னெடுப்பது கிடையாது. உலக ஒழுங்கமைப்பு மிக வேகமாக இந்த நிலைலையை நோக்கி நகர்ந்து மாறி விட்டது.

ஆகவே, சர்வதேச சமூகத்திடம் எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்கப் போவதில்லை. ஆனால், அவர்கள் செய்யக் கூடிய எம்மை நோக்கிய அவர்களின் பொறுப்புகள் சில உள்ளன. நாம் உள்நாட்டில் பெறுகின்ற அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றைப் பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென்மேலும் செழுமைப்படுத்தும், அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றை எப்படிப் பெற வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.

எமக்கான அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவது, அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, ஆகியவற்றை மக்கள் ஆணையுடனான எமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களை முன்னெடுத்துப் பெற்றுக்கொள்வோம். இதுவே எமக்குச் சாத்தியமான கொள்கையாகும். அதற்குரிய அரசியல் பலத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எமது மக்கள் வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் மிக அதிகமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் ஒரு தூரப் பார்வையுடனேயே இதைக் கூறுகின்றேன். எவ்வளவு அதிக வாக்குகள் எமக்குக் கிடைக்கின்றனவோ,  அந்தளவு எமது பலம் உயரும். எமது பலம், எந்தளவு உயர்கின்றதோ, அந்தளவு எமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுத்து நாம் உரிமைகளைப் பெறுவோம்.

நாற்பது வருடங்களாக மலைநாட்டில், தென்னிலங்கையில் குப்பை கொட்டிய பிற்போக்குக் கும்பலை விட பல மடங்கு பணிகளை நாம் 2015 – 2019 வரையான நான்கே வருடங்களில் செய்து காட்டியுள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இன்னமும் பல காரியங்களை நாம் செய்யவு ள்ளோம். மக்கள் பலமே எமக்கு வேண்டும். எம்மை எதிர்க்கும் உதிரிகளை தேர்தல்களில் தூக்கி வீசி, எமது பலத்தையும், ஆட்சியையும் நாம் நிலைநாட்டுவோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More