செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசுக் கட்சி வழக்கில் புதிய திருப்பம்! – சுமந்திரன் தகவல்

தமிழரசுக் கட்சி வழக்கில் புதிய திருப்பம்! – சுமந்திரன் தகவல்

3 minutes read
“சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல்’ (Pre – Trial Conference) முறைமை சட்டத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ளது. அந்த முறைமை தமிழரசுக் கட்சி வழக்கில் முனெடுக்கப்படவிருக்கின்றது.”

– இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று தகவல் வெளியிட்டார்.

இத்தகைய முறைமைக்கு வழி செய்யும் சட்ட திருத்தம் குடியியல் நடவடிக்கைச் சட்டக்கோவையில் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்டு, பல வழக்குகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுவே தமிழரசுக் கட்சி வழக்கிலும் பின்பற்றப்படவுள்ளது.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களின் கூட்டத்தின் பின் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்பந்தமான வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாகக் கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு வரவிருக்கின்ற காரணத்தால் அது குறித்து உரையாடினோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களெங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அந்த யோசனையின் விவரங்களை நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம். ஆனால், பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என்பது இணங்கப்பட்டிருக்கின்றது. முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில் இடம்பெற்றது.

எட்டு எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கில் அழைப்பார்கள். கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய இடையீட்டு மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கின்றது. அவ்விடயத்தால் வழக்குத் தள்ளிப் போகக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அதைத் தவிர நாங்கள் அனைவரும் மறுமொழி அணைத்துள்ளோம், இப்பொழுது குடியியல் நடவடிக்கைகள் சட்டமூலத்தில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு  அமைவாக வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டத்தரணிகள் சகிதம் நீதிபதியோடு ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் வழக்கை சுமுகமாகத் தீர்க்கக்கூடிய வழிகள் என்ன என்பதை நீதிபதியோடு இணைந்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் சட்டப்படியாக இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி மறுமொழி வழங்கிய பின்னர் ஒரு திகதியைத் தீர்மானித்து கலந்துரையாடலை மேற்கொண்டு வழக்கை என்ன மாதிரி முடிவுறுத்தலாம் என்ற தீர்மானத்துக்கு வரலாம். அதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூடி எடுக்கப்போகும் தீர்மானம் தொடர்பாகக் கலந்துரையாடி இணக்கப்பாட்டைத் தெரிவிக்கும்.

அத்தோடு, ‘வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருக்கின்றது, நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கின்றது, கட்சியினுடைய சின்னத்தைப் பாவிக்க முடியாமல் இருக்கின்றது, தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள்?’ என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்துகொண்டிருக்கின்றது. இதனைப் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதனை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துமாறும் என்னைப் பணித்தும் இருக்கின்றார்கள். கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்தத் தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையா. ஆகவே, இதைத் தெரிந்து கொண்டே சிலர் வேண்டுமென்றே பிரசாரத்தை மேற்கொள்கின்றார்கள்.

அதனால்தான் இந்தத் தெளிவுபடுத்தலைச் செய்கின்றோம். வழக்கில் நிறுத்தப்பட்டிருப்பது கட்சியின் தெரிவுகள். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தெரிவுகள் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒரு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதனுடைய பிரதிபலன் என்னவென்றால் அதற்கு முன்னிருந்த தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கட்சியினுடைய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன் ஓர் ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கின்றது. எதிர்வரும் எந்தத் தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடியது. மத்திய செயற்குழுவில் அது சம்பந்தமான தீர்மானம் எடுப்போம்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே கடந்த திங்கட்கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 5 நீதியரசர்கள் குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் ஆஜராகினேன். அது அடிப்படையில்லாத மனு எனத் தெரிவித்து அதனைத் தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா வழக்குச் செலவும் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளபோது அதனைப் பற்றிப் பேசக்கூடாது.

அரசு தேர்தலைபி பிற்போட முனைப்புக் காட்டுகின்றது என்பதை அரசமைப்பில் 83 (பி) என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே தெரிகின்றது. அதைப் பற்றி விளக்கமாகவும் விவரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தித் தேர்தலைப் பிற்போடுவதற்கான ஒரு சதி செய்யப்படுகின்றது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More