– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, “தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டுக்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்திருக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிப்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றனவா?” – என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே விக்னேஸ்வரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ற முறையிலும், தமிழ்த் தேசிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.
இந்த விதத்திலே என்னுடைய அருமை மாணவன் எம்.ஏ.சுமந்திரன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்வு அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ – உணர்ச்சியினாலோ பார்க்கக் கூடியவர் அல்லர்.
அந்தவிதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராகச் சிறீதரன் வருவதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியத்துக்காகக் குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்றுதான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கின்றோம்.
ஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்னோக்கிச் வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.” – என்றார்.