செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டு தனிவழி!- விரைவில் வேட்பாளரைப் பெயரிடத் தீர்மானம்

மொட்டு தனிவழி!- விரைவில் வேட்பாளரைப் பெயரிடத் தீர்மானம்

2 minutes read

ஜனாதிபதித் தேர்தலில் தமது மொட்டுச் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரைப் பெயரிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

கட்சியின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது.

மொட்டுக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பொதுஜன பெரமுனவின் முன்னிலை சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அதற்கமைய, மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தொடர்பில் ஆராய நேற்றைய கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய அரசுக்கு அதிகாரத்தை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என வலியுறுத்தினர் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.

அதன்படி பெரும்பான்மையான ஆதரவுடன் கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராகத் தெரிவு செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்கு எதிராகக் கட்சியைச் சேர்ந்த யாரேனும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகர காரியவசம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

வெற்றியீட்டக்கூடிய ஒருவரை எதிர்வரும் சில நாள்களில் வேட்பாளராக அறிவிக்க கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படும் பட்சத்தில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொதுஜன பெரமுனவின் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதே தமது விருப்பம் என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்கக் கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த 30 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கடந்த சனிக்கிழமை சந்தித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப்  பெற்றுக்கொள்வது குறித்து அங்கு கலந்துரையாடினர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தம்மை ஆதரிப்பீர்களா? இல்லையா ? என்ற விடயத்தை உடனடியாக  அறிவிக்குமாறு பொதுஜன பெரனமுனவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

இதேவேளை, பெரும்பாலான கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக தாம் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதாகப் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் விக்கிரமசிங்க எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More