ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று திங்கட்கிழமை வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், பா.அரியநேத்திரன் ஆகியோரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் காணப்படுகின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது:
சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்ற அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்திருந்தனர்.
இந்தப் பொதுக்கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக பல்வேறுபட்ட சந்திப்புக்களை நடத்தியிருந்தது.
எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரைத் தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், கே.வி.தவராசா, பா.அரியநேத்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக அரசியல் கட்சிகள் சாராதவராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகவும் வேட்பாளர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேடல்கள் இடம்பெற்றன.
பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற ஆணாக இருந்தாலும் போதுமானது என்ற அடிப்படையில் தேடப்பட்டபோதும் பொருத்தமானவர்களை அடையாளம் காண முடிந்திருக்கவில்லை.
அதனையடுத்து வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அதுவும் பலனளிக்கவில்லை. அதனையடுத்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்பினர் பிரதிநிதிகளைக் கோரியபோதும் அவர்களும் பின்னடித்தனர்.
இதற்கிடையில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் சம்பந்தமாகவும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் உருவெடுத்தன. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் களமிறக்குவதாக இருந்தால் கட்சிகளில் தங்கியிருக்கத் தேவையில்லை என்ற நிலைமை உருவானது.
இவ்வாறான பின்னணியில்தான் மேற்படி நபர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலுக்கு வந்துள்ளன. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் அனைத்துக் கட்சிகளும் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படையில் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சி ஊடாக களமிறக்குவதற்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், கே.வி.தவராசாவை பொறுத்தவரையில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தில் அனைத்து தரப்பினரும் இறுதியும் உறுதியுமாக இருந்தால் களமிறங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்ற தொனிப்பட சமிக்ஞை வெளியிட்டுள்ளார்.
இலண்டனில் தங்கியிருக்கும் சந்திரகாந்தனைப் பொறுத்தவரையில், தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு அவர் தயாராக இருப்பதாக அவரை அணுகியவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அதன் பின்னர் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனை நீக்க வேண்டும் என்றும், அதேபோன்று இந்த விடயம் சம்பந்தமாக இலங்கைக்கு வருகை தந்தே நேரில் உரையாட முடியும் என்றும் கூறியுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.
இதேநேரம், சந்திரகாந்தனை நிறுத்துவது மிகப் பொருத்தமானது என்று பத்து காரணங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் தகவல் அனுப்பியுள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் போட்டியிடுவதற்குத் தயாராக இல்லாவிட்டால் கோட்பாட்டு ரீதியாகத் தான் ஆதரிக்கும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை வலுப்படுத்துவதற்காகக் களமிறங்குகின்றேன் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரனும் தன்னை அணுகியவரிடத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி.விக்னேஸ்வரம் எம்.பியைப் பரிசீலிப்பது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாகப் பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்குப் பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்படி நால்வரில் ஒருவரை இறுதி செய்வதில் நெருக்கடியான நிலைமைகள் தோன்றினால் பொதுக்கட்டமைப்பின் அங்கத்தவரும், அரசியல், சிவில் செயற்பாட்டாளருமான செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளையை இறுதி ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.