செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் | அருட்தந்தை மா.சத்திவேல்

தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் | அருட்தந்தை மா.சத்திவேல்

2 minutes read

தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று சனிக்கிழமை (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்கான சக்தியாக தம்மை அடையாளப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசநாயக்க அண்மையில் யாழில் நடத்திய ஜனாதிபதி தேர்தல் வாக்கு வேட்டை பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்களின் அபிலாசைகள் என தான் நினைத்ததை மட்டும் காட்டி பேசியதோடு மாற்றத்திற்கான தெற்கின் மக்களோடு இணைந்து வடகிழக்கு தமிழர்களும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அச்சுறுத்தும் தொனியில் பேசியது அரசியல் அநாகரீகமாகும்.

தமிழர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதும் இன அழிப்பின் முகம் கொண்டதுமான வார்த்தைகளாகும். இதனை வன்மையாக கண்டிப்பதோடு வடகிழக்கு தாயக மக்கள் பேரினவாத கருத்தியல் கொண்ட இன அழிப்பு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு இவர்களின் வெற்றி தினத்தினை தமிழ் தேசமெங்கும் இன்னுமொரு ஒரு கரி நாளாக வெளிப்படுத்த வேண்டும்.

அநுரகுமார தமது உரையில் எந்த பாதையை தேர்ந்தெடுக்க, வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை மறைமுக அச்சுறுத்தும் பாணியில் கூறியதோடு மாற்றத்தை விரும்பும் தெற்கு மக்களோடு இணைய வேண்டும் என்று அழுத்தமாகவும்  குறிப்பிட்டார். அவ்வாறு வாக்களிக்காவிட்டால் தமிழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்பதையும் நாசுக்காக வெளியிட்டார். இது அவர்களின் 1988/89 கால நாகரிகத்தை காட்டி நிற்கின்றது.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை துண்டாடி பேரினவாதத்தின் வரலாற்று பெருமையை தமதாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். அவர் அந்த பிரிப்பு நிலையில் நின்று நாட்டின் பிரச்சினையை வடக்கு,கிழக்கு, தெற்கு என ஒன்றாகக்கூடி பேசித்தீர்ப்போம் என  தனது உரையில் குறிப்பிட்டார். வடகிழக்கை இனி இணைய விடமாட்டோம் என் நிலைப்பாட்டின் தொனியாகும். இதுவே அவர்கள் அரசியல் கலாச்சாரம். இத்தகைய கலாச்சாரத்தோடா தமிழர்களை ஒன்று சேர அழைப்பு கொடுக்கின்றார்கள்?

யாழின் கூட்டத்தில் மகிந்த, ரணில் மைத்திரி போன்றோரும் அவர்களின் சகாக்களும் புரிந்த பொருளாதார குற்றங்களுக்கும், நாட்டின் பொது சொத்தினை கொள்ளையடித்தமைக்கும் தண்டனை கொடுப்போம் என்று கூறியவர் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அரசு படையினர் புரிந்த யுத்தக் குற்றங்களை மறைத்து யுத்தத்திற்கு முகம் கொடுக்காத மக்கள் முன் நிற்பதைக் போல் நின்றார்.

இதே அநுர குமார அண்மையில் இன்னுமொரு தேர்தல் பிரச்சாரத்தின் போது “நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்த குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவோரை தண்டிக்க மாட்டோம்” எனக் கூறியது மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் வரிசையில் நின்று  இனப்படுகொலை யுத்த குற்றங்களுக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி தன்னுடைய ஆட்சியில் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.

உயிர்ப்பு தின (2019) குண்டுத்தாக்குதல்களுக்கு காரணமானோரை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று தெற்கில் வாக்கு கேட்பவர்கள் வடக்கிலே 30 வருட காலமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை, விஷக் குண்டுகளை மக்கள் மீது பொழிந்தவர்களை, பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கபட்டமைக்கு காரணமானவர்களை வெளிப்படுத்தமாட்டோம் என தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட  கொடுமையின் உண்மையை மறைத்து தன்னுடைய அரசியலுக்காக தெற்கில் ஒரு பகுதியினருக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதலின் உண்மை தன்மையை வெளிப்படுத்துவோம் என கூறுவது அரசியல் வெட்கச் செயலாகும்.

அண்மையில் அநுரகுமார யாழில் நடத்திய கூட்டத்தில் மட்டுமல்ல வெறும் பிரதான வேட்பாளர்கள் வடகிழக்கில் நடாத்திய எந்த ஒரு வாக்கு வேட்டை கூட்டத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் மற்றும் சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களத்தின்  சிங்கள பௌத்த மயமாக்கல், சிங்கள பௌத்த குடியேற்றங்கள், தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், அடாத்தாக விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே.

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர்.

சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர்வோம். தெற்கின் தேர்தல் வெற்றி தினம்  என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More