புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐநாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வு

ஐநாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வு

2 minutes read

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. அவ்வறிக்கைகளில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கக்கூடியவகையில் அத்தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பில் 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆகக் காலநீடிப்புச் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாததத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் வியாழக்கிழமை (19) பேரவையில் (பக்க அறையில்) ஆராயப்பட்டது.

இதில் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுடன் இலங்கையைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பிலான முதல் வரைபு குறித்தும், அதனை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது.

அதேவேளை இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை நீடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள இவ்வரைபில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளவேண்டியிருப்பின், அத்திருத்தங்களுடன்கூடிய இறுதி வரைபு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் வெளியிடப்படும்.

ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இத்தீர்மானத்தை வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய அவசியம் ஏற்படின், இறுதி வரைபை அடிப்படையாகக்கொண்டு சிவில் சமூக அமைப்புக்கள் உறுப்புநாடுகளுடன் வாக்குகளைக்கோரி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More