வாஷிங்டன்: அமெரிக்காவில் 2வது முறையாக நேற்றும், மகாத்மா காந்தியின் சிலை உடைத்து, மர்ம நநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு வெளிநாடுகளிலும் போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த போராட்டத்தின் போது, அங்கிருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நேற்றும் இந்நாட்டில் காந்தி சிலை உடைக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டேவிஸ் நகரில் 6 அடி உயரத்தில் 294 கிலோ எடை கொண்ட மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த 4 ஆண்டுக்கு முன் அன்பளிப்பாக அளித்த இந்த சிலை, பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில் நிறுவப்பட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி காலையில் பூங்கா ஊழியர்கள் பார்த்த போது, சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
சிலையின் அடிப்பாகத்தில் கால்கள் உடைக்கப்பட்டு சிலையில் தரையில் கிடந்துள்ளது. அதன் தலைப்பகுதி முழுவதும் உடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பூங்கா ஊழியர்கள், சிலையை பத்திரமான இடத்தில் வைத்துள்ளனர். இது தொடர்பாக டேவிஸ் நகர போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை சிலையை உடைத்தவர்கள் யார், எதற்காக உடைத்தனர் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
- அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
- சமீபத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில், தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் முன்பாக உள்ள காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.