கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.
மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.