2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறு வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து ஐக்கியநாட்டு சபை அகதிகளுக்கான நிறுவனம் அதனோடு இயங்கிய ஏனைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வெளியேற்றம் பொது மக்களிடத்தில் வெறுமையை ஏற்படுத்தியது. நலிவுற்றவர்கள், வயோதிபர்கள், வலுவிழந்தவர்கள் நிலை கவலை தருவதாக இருந்தது.
சமாதான காலப்பகுதியில் நலிவுற்றவர்களுக்காக பல்வேறு அமைப்புக்கள் கட்டி எழுப்பப்பட்டன. வயோதிபர் இல்லங்கள், மனநிலை குன்றியவர்களுக்கான இல்லங்கள், மூளைவளர்ச்சி குறைந்தவர்களுக்கான இல்லங்கள், கண் பார்வை காது கேளாமை குறைபாடு உடையவர்களுக்கான இல்லங்கள்,பெற்றோர்களை இழந்தவர்களுக்கான இல்லங்கள் என பல அமைப்புகள் நலிவுற்றவர்களை பாதுகாத்து ஊக்கப்படுத்தி மற்றர்களுக்கு சரி நிகரான வாழ்க்கையை ஏற்படுத்தி இருந்தன. இவர்கள் அனைவரும் ஊரின் பதட்டத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர். இந்த அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து “மாற்றுவலுவுள்ளோர் அமைப்பு” (Differently abled Forum) உருவாக்கப்பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரச சரர்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த உதவி வந்தன. மாற்றுவலுவுள்ளோர் அமைப்பின் ஒருங்கிணைப்பு சேவை பயனுள்ளதாக அமைந்தது.
வன்னேரிக்குளத்திலும் ஓர் முதியோர் இல்லம் இயங்கி வந்தது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட ஆண், பெண், வயோதிபர்கள் தங்கியிருந்த போது போர் இடப்பெயர்வு ஏற்பட்டது. இவர்கள் முதற்கட்டமாக முறிப்பு பகுதியில் தற்காலிகமாக இடமாற்றி வைக்கப்பட்டன. பின்னர் கல்மடுநகர் பகுதியில் தற்காலிக கொட்டகைகளில் அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டதும் ஒரு சில மாதங்களின் பின்னர் அங்கிருந்தும் இடம்பெயர்ந்து மயில்வாகனபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு சில நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சில வயோதிபர்கள் இறந்து போனார்கள். மேலும் இடம்பெயர வலு இல்லாது 2009 மாசி இராணுவ முன்னேற்றத்தின் பின்னர் வவுனியா பகுதியை வந்தடைந்தனர்.
மனநலம் குன்றியவர்களுக்காக 1991ம் ஆண்டு உடுவில் பகுதியில் உருவாக்கப்பட்ட அமைப்பானது 1998ம் ஆண்டு காலப்பகுதியில் அக்கராயன் பகுதிகளில் பெண்களுக்கு “வெற்றிமனை” என்னும் நிலையமாகவும்
ஆண்களுக்கு “சந்தோசம் இல்லம்” நிலையமும் செயற்பட ஆரம்பித்தனர். 2002ம் காலப்பகுதியில் பின்னர் வெற்றிமனையானது, கனகபுரம் பகுதியில் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமதான பேச்சுக்களின் வேண்டுகோளுக்கு அமைய நோர்வே அரசின் நிதியுதவியுடன் நோர்வே தூதுவர் விதார் கெல்கிசனால் அடிக்கல்நாட்டி பின்னர் 2005 காலப்பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. புத்தி சுவாதீனம் குறைந்த 176 பெண்கள் இந்நிலையத்தில் பெண்கள் புனர்வாழ்வு அமைப்பின் சிறப்பான வழி நடத்தலில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு கொண்டு இருக்கையில் போர் அச்சுறுத்தியது. எனவே அங்கிருந்து அவர்கள் இடம்பெயர்ந்து வள்ளிபுனம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மலர்ச்சோலையில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் செந்தளிர் இல்லம் கொண்டு செலலப்பட்டனர். அங்கிருந்து பின்னர் இரணைப்பாலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரணைப்பாலைப்பகுதியில் இருந்தவர்கள் போர் அனர்த்தம் காரணமாக ஆனந்தபுரப்பகுதிக்கு சென்று பின்னர் மாத்தளன் வெட்டைப்பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். மாத்தளன் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்த போது அங்கும் ஈடுகொடுக்க முடியாமல் வலைஞர்மடப்பகுதிக்கு சென்று இறுதியில் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு அல்லலுற்று நகர்ந்தவர்களை பாதுகாத்து வழிகாட்டி அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் இவர்களுள் 2009.4.22 அன்று நடைபெற்ற செல்வீச்சில் சிலர் மாண்டு போனார்கள். எஞ்சியவர்களில் சிலரை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர். இறுதியாக 76 பேர் வவுனியா முகாமை வந்தடைந்தார்கள்.
இது மட்டும் அல்லாது கிளிநொச்சி டிப்போ சந்தி பகுதியில் ஊனமுற்றோர் அமைப்பு (KDRO) , மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கான அமைப்பு ஆகியனவும் இடப்பெயர்வை சந்திக்க வேண்டி நேரிட்டது. அறிவியல்நகர் பகுதியில் அன்புசேலை என்னும் முதியவர்களுக்கான இல்லமும் இயங்கி வந்தது. போதிய வசதிகளுடன் இருந்தவர்கள் போரின் கொடூரத்திற்கு இலக்காகி பிந்நாளில் வெட்ட வெளியில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறே குருகுலம், அன்புமணி போன்ற சிறார் இல்லங்களும், செஞ்சோலை, அறிவுச் சோலை என்பனவும் இடம்பெயர்ந்தன.
கட்புலன், செவிப்புலன் அற்றவர்களுக்கு இனியவாழ்வு இல்லம் போதிய வசதிகள் அப்போது இருந்தாலும் அவர்கள் பிந்நாளில் இடம்பெயர்ந்து போர் வலயத்துக்குள் சென்றமையால் துன்பங்களை அனுபவித்தனர்.
நலிவுற்றவார்களுக்கு பல அமைப்புக்களையும், இல்லங்களையும் விடுதலை புலிகளின் துணை அமைப்புகளே நடத்தி வந்தன. இடப்பெயர்வு காலங்களில் நலிவுற்றவர்களுக்காக பலர் தங்களது பாதுகாப்பையும், சுயநலத்தயையும் பொருட்படுத்தாது இறுதி வரை உதவிவந்தமை பாராட்டப்பட வேண்டியவை.
இடம்பெயர்கின்ற இடங்களில் இவர்களுக்கு தேவைபட்ட உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நலிவுற்றவர்களுக்கு போரின் இறுதி வரை மனித நேய அடிப்படையில் பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/