கூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டமானது நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
தேமுதிகவிற்கு எந்த காலத்திலும் டென்ஷன் கிடையாது. 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட மாபெரும் இயக்கம் தேமுதிக என்ற பிரேமலதா, விஜயகாந்த் முன்பிருந்ததை விட நலமாக உள்ளார், முன்பை போல விரைவில் அவர் சிங்கக் குரலில் பேசுவார் எனவும் பேசினார்.
நாம் தனித்து போட்டியிட்டுள்ளோம், ஏன் இப்போதுமே கூட தனித்து போட்டியிட நான் உறுதியாக உள்ளேன் என்ற அவர், பொருளாதாரம் இல்லாததால் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை படி நடந்து கொண்டிருக்கிறோம்.
விரைவில் நமக்கு காலம் தமிழ்நாட்டில் வரும் அப்படிபட்ட காலம் வரும் போது எந்த லட்சியத்திற்காக இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம் பெறாது என்று எந்தவித அதிகார்வ பூர்வ அறிவிப்பும் தாங்கள் வெளியிடவில்லை என கூறினார். மேலும் கூட்டணி குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் பிரேமலதா தெரிவித்தார்.