புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை மட்டும் மருத்துவமனையில் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும். தகவல் தொடர்புக்கு வேறு எந்த மொழியையும் பயன்படுத்த கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதற்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒன்றான, கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு (ஜிப்மர்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை மட்டும் மருத்துவமனையில் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் பிற மொழியில் செவிலியர்கள் பேசினால், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், தகவல் தொடர்புக்கு வேறு எந்த மொழியையும் பயன்படுத்த கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னணியில், மேற்கண்ட மருத்துவமனையில் 50 சதவீதம் கேரள செவிலியர்கள் பணியாற்றுவதால், அவர்கள் தங்களது தாய் மொழியில் பேசி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜிபி பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லீலதர் ராம்சந்தானி கூறுகையில், ‘மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் சிலர், மலையாளத்தில் பேசியதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதனால், மருத்துவமனையில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயக நாட்டில், அரசு நிறுவனம் அதன் செவிலியர்களை தங்கள் தாய்மொழியில் பேசுவதை தடைசெய்கிறது.
இது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை மீறுதல் ஆகும். மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல், ‘மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்’ என்று ராகுல்காந்தியும் டுவிட் செய்துள்ளார்.