செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி திரையிசைப் பாடல்களை அழகூட்டிய இலக்கிய கையாடல்கள் | வெற்றி துஷ்யந்தன்

திரையிசைப் பாடல்களை அழகூட்டிய இலக்கிய கையாடல்கள் | வெற்றி துஷ்யந்தன்

3 minutes read

-ஓர் இரசனைக் குறிப்பு-

இசை என்றால் என்ன...? (பகுதி-1)

தென்னிந்திய திரைத்துறையின் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி எப்போது எங்கள் மண்ணோடு கலக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை திரைத்துறை சார் ஒவ்வொரு கூறுகள் சார்ந்தும் ரசிகர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து வியக்கின்றவர்களாக மாற்றம் கண்டுள்ளார்கள்.

குறிப்பாக திரையிசைப் பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் உதடுகள் வழியே என்றைக்கும் முணுமுணுத்தபடியே இருப்பதனால், பாடல்கள் பற்றிய ஆய்வுகளும் எப்போதும் அவர்களிடத்தில் இருந்து விடுவதுண்டு. இந்த ஓட்டத்தில் திரைத்துறைப் பாடல்களில் இலக்கியப் பயன்பாடுகள் பல அன்றும், இன்றும் சரளமாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலக்கியப் பாடல்களை முழுமையாகவோ அல்லது அதன் வரிகளில் ஒருசிலவற்றை எடுத்து திரையிசைப் பாடல்களோடு இணைத்தோ அந்தப் பாடல்களை உருவாக்கி பாடல்களை சுவாரஷ்யப்ப‌டுத்திய பாடல்களாக பலவற்றை நாம் அறிந்திருக்கின்றோம். அப்படியான பல பாடல்களுள் நினைவிம் வரும் ஒரு சில பாடல்களை ஆராய்ந்து அவை எந்த இலக்கிய வடிவத்துக்குரியவை என்பதை சுவாரஷ்யமாக நோக்குவதே இந்தப் பதிவின் பிரதான நோக்கம் ஆகும்.

‘இருவர்’ திரைப்படத்தில் வைரமுத்துவின் அழகிய மொழிக் கையாடல்களோடு அமைந்த பாடலாக ‘நறுமுகையே நறுமுகையே’ பாடல் அமைந்திருந்தது. இந்தப் பாடலில்,

‘ஞாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்’

என்ற குறுந்தொகைப் பாடலை சரணத்தில்,

‘ஞாயும் ஞாயும் யாராகியரோ

நெஞ்சில் நின்றதென்ன

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவே சேர்ந்ததென்ன’

என்றவாறு மிக அழகாக யாத்திருந்தமை இன்று கூட இரசிக்கவைக்கிறது.

தளபதி திரைப்படம் உண்மையில் நட்பின் ஆழத்தை உணர்த்துவதாக வெளியாகிய ஒரு படமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்திலும் ‘ராக்கம்மாக் கையைத் தட்டு’ பாடலில் நான்காம் திருமுறைப்பாடலான திருநாவுக்கரசரின் தேவாரம் அப்படியே பிரயோகிக்கப்பட்டிருந்தது. அதாவது,

‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயின் குமின் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’

என்னும் தேவாரம் பாடலின் இடையில் மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முரளி, கௌசல்யா நடிப்பில் உருவான தேவாவின் இசையில் வெளியான ‘வானம் தரையில் வந்து நின்றதே’ என்ற பாடலின் ஆரம்பமே தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடலான,

‘பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்’

என்ற நாலாயிர திவ்விய பிரபந்தத் திரட்டின் ஒரு பாடலாக அமைந்தது.

அடுத்து கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தில் தேவாவின் இசையில் வெளியான ‘சின்ன சின்னக் கிளியே’ என்ற பாடலின் நடுவே அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதியின் ஆறாம் பாடலான,

‘சென்னியது உன் திருவடிதாமரை சிந்தையுள்ளே

முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே’

என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் உருவான ‘ஹாப்பி நியூ இயர் வந்ததே’ என்ற பாடலின் இடையில் கூட ஆண்டாளினால் பெருமாளை எண்ணி அவர் கரம் பிடிக்க வேண்டிய அத்திருநாளை எதிர்பார்த்து காதலோடு பாடப்பட்டிருக்கும் ‘நாச்சியார் திருமொழி’ பாடலான,

‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்’

என்ற மிக அற்புதமான கவிச்சுவை மிக்க இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இதே போல காதலன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் குற்றாலக்குறவஞ்சியில் உள்ளடங்கும் பாடலான,

‘இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பையோ மோகினியோ’

என்ற இலக்கிய பாடல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

உண்மையில் தென்னிந்திய திரைத்துறையின் தனித்தன்மைக்கு இப்படியான பாடல்கள் சான்று பகர்கின்றன எனலாம்.

இலக்கியத்தின் ஆழமும், அவை நமது வாழ்வியலோடு எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன, என்பதற்கு மேற்குறித்த சில பாடல்களை உதாரணமாகக் காட்டலாம். இலக்கிய பாடல்களை தனித்து படிப்பதை விட இசையோடும், மெட்டோடும் கலந்த பாடலாக கேட்பது அலாதியானது. அதன் இரசனை எம்மை வேறுதளத்திற்கே கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றது என்பதில் ஐயமில்லை.

வெற்றி துஷ்யந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More