சென்னை: நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற சட்டப்பேரவையில் இன்று மசோதா நிறைவேற்றப்படும் என்றும், மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வு மூலமாக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் தேர்வால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இந்த தேர்வால் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தேர்வுக்கு தயாராகும் வகையில் அதிக செலவு செய்து, தனியார் பயிற்சி வகுப்புகளில் அவர்களால் படிக்க முடியவில்லை. இதனால், அவர்களால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவானது. இதனால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போய் விட்டதே என்று ஏக்கத்தில் மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத சம்பவங்களில் ஈடுபட தொடங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். இதனால், நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஒன்றிய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை. கிடப்பில் போட்டு விட்டனர். இதற்கு அப்போதைய அரசு உரிய அழுத்தம் கொடுக்காததே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், ‘‘திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் திமுக அரசு இறங்கியது. ஆட்சி பொறுப்பேற்றதும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த ஆய்வுக்குழு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது.
மாணவர்கள் இந்த தேர்வால் எந்த விளைவுகளை சந்திக்கிறார்கள் உள்ளிட்டவை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது. தொடர்ந்து இந்த குழு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியது மட்டுமல்லாமல், தேர்வை ரத்து செய்வதற்கான 3 விதமான பரிந்துரைகளையும் அந்த குழு அரசுக்கு வழங்கியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 12ம் தேதி (நேற்று) நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அறிவித்தது. குறைந்த நாட்களே இருந்ததால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாத நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாவட்டம் மேட்டூரில் தனுஷ் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று வரை நீட் தேர்வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி-அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற-நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.
நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ-மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை (இன்று) தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது.
இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்னையாக் கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* சட்டரீதியான போராட்டம் தொடரும்
மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.