இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி பயணப்படுகிறேன். மீண்டும் அந்த வாழ்வைநோக்கி, இது ஒரு படம் அல்ல அது தான் நான்…
-வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்–
ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர். கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது. ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை, கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார்.
லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கிடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல, அப்பா இறங்கின உடன ஓடிப்போய், அப்பாவின்டை bagகை வாங்கிறதுக்கும் கையை பிடிக்கிறதுக்கும் அடிபட்டு நாங்கள் அப்பாவோட வர, அம்மா ஒழுங்கை முடக்கில சோட்டிக்கு மேல சீலையை கட்டிக்கொண்டு நிக்க எல்லாரும் அப்பாவோட மாப்பிளை ஊர்வலமே வைக்கிறனாங்கள்.
அப்ப நிறைய Government Servants எல்லாம் இப்பிடித்தான் வெளி மாவட்ங்களில தான் வேலை செய்தவை. ஊரில எப்பிடியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தரை மகளுக்கு கட்டிக் குடுத்திடுவினம். இவையில வெளி இடங்களில வேலை செய்யிறவையின்டை வாழ்க்ககையில் தாம்பத்தியம் என்பது கடிதத்தில் தான் நடக்கும்.
வெளி இடங்களில வேலை செய்யிறவை வருசத்தில மூண்டு நாலு தரம் தான் வந்து போவினம். இந்த போக்கு வரத்தோட நாலு பிள்ளையும் பிறந்திடும். பிள்ளைய படிப்பிக்க வளக்க எண்டு அவையின்டை priorityயும் மாறீடும். பெத்தது எல்லாம் அக்கரை சேர, retire பண்ணினா பிறகு தான் இரண்டு பேரும் வாழ்க்கைச் சந்தோசத்தை வாழத்தொடங்குவினம். அவங்கடை வாழ்க்கை மட்டும் அல்ல ஒவ்வொரு முறை வீட்டை போற பயணங்களும் பிரச்சினையானது தான்.
அப்பா புல்லுமலையில இருந்து வரேக்கேயும் இப்பிடித்தான். ஒரு நாளைக்கு ஒருக்கா மட்டும் மட்டக்களப்பில இருந்து வாற பஸ்ஸில மட்டக்களப்பு town க்கு வந்து. ஆற்றேம் வீட்டை இரவு தங்கி காலமை யாழப்பாணம் வெளிக்கிட்டிட்டு போய் பேப்பரை பார்த்தால் ஹபறணையில தமிழ் ஆக்களை இறக்கி வெட்டினது எண்டு தலையங்கம் இருக்கும்.
மூத்தவன்டை school concertக்கு வாறன் எண்டனான் போகாட்டி அவன் பாவம் பிள்ளை, போன முறையும் போகேல்லை எண்டு தனக்கு ஒண்டும் நடக்காது எண்டு நம்பிக்கையோட ஒவ்வொரு முறையும் அப்பாக்களின் பயணங்கள் இருக்கும்.
கிடைச்ச ஒரு கிழமை லீவில மட்டக்கிளப்புக்கு வந்து யாழ்ப்பாண பஸ் ஏற ஒரு நாள் போயிடும். பஸ் வேற ஓடுறதிலும் பார்க்க check point இல நிக்கிற நேரம் கூட. கடைசி நேரம் ticket book பண்ணினா seatம் கிடைக்காது, எண்டாலும் ஆராவது இடைக்கிடை மாறி விடுவினம். நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் தான் வீட்ட வாறது.
ஆனையிறவு தாண்ட ஊர் பேர் சொல்லி சந்திகளில பஸ்ஸை நிப்பாட்டுவினம். Drivers ம் பாவம் எண்டு அவரவர் சொல்லிற இடத்தில இறக்குவாங்கள். இவ்வளவு தூரம் வந்த பஸ் ஆனையிறவு தாண்டினாப்பிறகு சரியான slow ஆ போற மாதிரி இருக்கும்.
அம்மான்டை சாப்பாடு, பிள்ளைகளின்ட school prize giving, பிள்ளையார் கோவில் திருவிழா, கைதடி கலியாணம் எண்டு மனதில ஒவ்வொண்டையும் நெச்சுக் கொண்டு வர ஒருமாதிரி பஸ் town க்கு வந்திடும்.
பெட்டி எல்லாம் இறக்கி, பஸ் மாறி பயணம் மீண்டும் வீட்டை நோக்கி தொடர்ந்து ஒரு மாதிரி வீட்டுக்க வர அம்மம்மா பொரிக்கிற நல்லெண்ணை முட்டைப்பொரியலும் புட்டும் மணக்க அப்பாவுக்கு இப்ப தான் பசிக்கத் தொடங்கும்.
வீட்டை வந்து சாமாங்களை பிரிச்சுக் குடுத்திட்டு அப்பா தோஞ்சு சாப்பிட்டுட்டு வர பாய் விரிச்சு அப்பாவின்டை இரண்டு பக்கமும் வயித்தலை காலை போட்டுக்கொண்டு நாங்கள் படுக்க அம்மா அங்காலை தள்ளிப் படுப்பா.
வெளி ஊரில வேலை செய்த யாப்பணீஷ் எல்லாரும் அந்தந்த ஊரில ஒரு network வைச்சிருந்தவை (சத்தியமா அந்த ஊருக்குள்ள இல்லை). அந்தக்காலத்து சத்திரம் மாதிரி இவைக்கும் சில தங்குமடங்கள் இருந்தது.
இரண்டு இல்லாட்டி மூண்டு பேர் Share பண்ணிற room, common toilet, பின்னேரம் cards, carrom விளையாடிட்டு அரட்டைஅடிக்க ஒரு hall, இது தான் அவர்களது அரண்மனை. அநேமா இருக்கிற இடத்தில கோயில்ல ஒரு திருவிழாவும் செய்வினம். எப்படியும் கைக்காசை போட்டு ஊரில இருந்து நாலு கூட்டம் மேளத்தையும் கூப்பிடுவினம் .
எல்லாருமே அப்ப தங்கடை தமிழின அடையாளங்களை காப்பத்தவும் நிலை நிறுத்தவும் நிறைய பாடுபட்டவை. Transfer ல மாறிப்போனாலும் வாழையடிவாழையாக அந்த அறைகளும் புதுசா வாற ஊர்க்காரனுக்கு கை மாறிப்போகும். ஆரும் ஊரில இருந்து வந்தால் தேடி வந்தவரின் room mates adjust பண்ணி இடம், பாய் தலகணி எல்லாம் குடுத்து வந்தவருக்கு இடமும் சுத்திக்காட்டி அனுப்பிவினம்.
எல்லாரும் ஊரில மாமன் மச்சான், ஊர், சாதி எண்டு சண்டை இருந்தாலும், ஊரை விட்டு வந்தால் அநேகமாக சண்டை கிண்டை வாறேல்லை. சிங்களவன்டை அடி வாங்கினதால வந்த ஒற்றுமையோ தெரியாது.
அநுராதபுரம், காலி, நீர்கொழும்பு பக்கம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களும் இருந்தவை. இவை எல்லாரும் இங்கிலீசும், சிங்களமும் வெளுத்து வாங்குவினம். அது மட்டுமில்லை வேலை எண்டு வந்தா எல்லாரும் வெள்ளைக்காரர் தான்.
கிழமைக்கு ஊருக்கு ஒரு கடிதம் கட்டாயம் வரும். அதோட அநேமா Rotation ல அங்க இருக்கிறாக்கள் மாறி மாறி வருவினம். அப்பிடி வரேக்க ஒட்டின envelope ல காசு, கடிதம், அடுத்த மாசம் birthday வாற பிள்ளைக்கு ஒரு உடுப்பு அதோட அந்த ஊர் சாமானில ஏதாவதும் வரும்.
அப்பா அனுப்பிற காசுக்கு budget போட்டு செலவளிக்கிறது அம்மா தான். காராளி கடைக்கு மாதம் மாதம் சாமான் வாங்கிற கொப்பிக்காசு் தான் முதல் குடுக்கிறது.
கொப்பி, இந்த credit card க்கு நாங்கள் தான் முன்னோடி, ஊரில அநேமா எல்லாரும் local கடையில கொப்பிக்கு தான் சாமான் வாங்குவினம், bank மாதிரி ஆனால் வட்டியும் இல்லை, guarantor கைஎழுத்தும் இல்லை. திகதி குறிச்சு, Doctor’s prescription மாதிரி விளங்கியும் விளங்காமலும் விவரங்கள் எழுதி இருக்கும். ஆனாலும் சதம் கூட பிழைக்காது.
கடைக்காரர் வாய்விட்டு கேக்க முதல் மாசக்கடைசீல காசு போயிடும்.
Moratorium எண்டால் என்னெண்டு இப்ப கொரோனா வந்தாப்பிறகு தான் bank காரருக்கே தெரியும் ஆனா எங்கடை கடைக்காரர்களுக்கு அப்பவே தெரியும்.
அப்பாட்டை இருந்து காசு வரேல்லை கடைக்கு காசு குடுக்க நேரத்துக்கு குடுக்க ஏலாமல் போனால், வீட்டை tiffin ல இருந்து சாப்பாடு வரை, soap ல இருந்து paste வரை limited supply தான்.
நாலைஞ்சு நாள் கடை பக்கம் போகாமல் விட, அந்தாள் கூப்பிட்டு, தம்பி அம்மாட்டை சொல்லுங்கோ சாமான் கொஞ்சம் தட்டுப்பாடு வரும் , தாண்டிக்குளம் பூட்டின படியால் வந்து மாசச் சாமானை வாங்கி வைக்கச்சொல்லி. அதோ்ட தெரியும், அப்பான்டை காசும் வந்திருக்காது, காசை பற்றி யோசிக்க வேணாம், அதை அடுத்த மாசம் சேர்த்து எடுக்கலாம் எண்டும் சொல்லுங்கோ எண்டார் அந்தக்கடைக்காரர்.
பால்காசு, சீட்டுக்ககாசு, tuition காசு எண்டு குடுக்க வேண்டியதை எல்லாம் குடுத்திட்டு வரப்போற கோயில் திருவிழாவிற்கும் இடம் பெயர்ந்தா தேவைக்கும் எண்டு எடுத்து வைக்கிற அம்மாவின் சமப்படுத்தல் ஒருநாளும் பிழைக்கிறதில்லை. எங்க தான் commerce படிச்சாவோ தெரியேல்லை.
நான் வாற சனிக்கிழமை திரும்பிப் போவன் ஏதும் குடுத்து விடுற எண்டால் தாங்கோ எண்டு அப்பான்டை கடிதம் கொண்டு வந்த அங்கிள் (அநேமா இந்த uncle மாருக்கு எல்லாம் காரண பெயர்கள் தான் இருக்கும், வேலைக்கு ஏத்த மாரி bank மாமா, Dispenser மாமா, இடத்தின்டை பேரோட அக்கோபுர மாமா) சொல்ல milk toffee இல்லாட்டி ஏதாவது ஒரு பலகாரம் ரெடியாகும் (ஒரு பெரிய பைக்கற்றும், சின்னது ஒண்டும்) .
பெரிய பாரம் இல்லை எண்டு ஒரு இரண்டு மூண்டு கிலோவை வடிவா pack பண்ணி குடுக்க, இல்லை பரவாயில்லை எண்டு அவரும் கொண்டு போவார். இப்படித்தான் அப்ப courier service நடந்தது.
நிக்கிற இந்த ஐஞ்சு நாளில் கோயில் விசேசம் , சொந்தத்தில ஒரு நல்லது கெட்டது, யாரோ ஒரு வீட்டு பஞ்சாயத்து எல்லாம் முடிச்சு எங்களுக்கும் time ஒதுக்கி ஒரு படம், new market shopping, கலியாணி special ice cream எண்டு ஒரு Day out ம் இருக்கும்.
திரும்பிப்போற நாள் காலமை பஸ் ஸ்ராண்ட் கொண்டு போய் விடேக்க அப்பா இருபது ரூபா தந்து சொல்லுவார் அவசர தேவைக்கு பாவியுங்கோ எண்டு.
அப்ப போக்குவரத்து கொஞ்சம் கஸ்டம். பஸ்களும் கனக்க இல்லை . அநேகமா இ.போ.ச பஸ் மட்டும் தான். அரசாங்க வேலைகாரர் warrant வைச்சிருந்ததால கூடுமானவரை இரயில் பயணங்கள் தான். எங்கடை ஆக்கள் கனபேர் railway departmentல அப்ப வேலை செய்தவ, அவசரம் ஆபத்தெண்டால் ticket எடுக்க உதவியும் செய்வினம்.
கொழும்பில இருந்து வாற எல்லாருக்கும் ஊருக்கு வாறதெண்டால் train தான். யாழ் தேவி, mail train எல்லாம் famous ஆ வந்ததுக்கு காரணம் இந்த out station Government Servants தான்.
ஊரில செத்த வீடு எல்லாம் அநேமா மத்தியானத்தில தான் எடுப்பினம். அதுக்கு பேய் பிசாசு பஞ்சமி எண்டு கன காரணம் இருந்தாலும் யாழ் தேவி பார்த்து எடுக்கிறது தான் வழமை. தந்தி போனோன்ன வெளிமாவட்டங்களில வேலைசெய்தவை வெளிக்கிட்டு கட்டாயம் வருவினம். Train க்கு வைச்சுப் பாக்காத வேளைக்கு எடுத்தால், செத்த வீட்ட ஒரு பிரளயமே வரும். எம்டன் மகன் வடிவேலு மாதிரி பிரச்சனை பண்ணித்தான் விடுவினம்.
ஆடி அமாவாசைக்கு ஊருக்கு வாறவை நல்லூர் கொடியேத்தம் பாக்காம ஒரு நாளும் போக மாட்டினம். அப்பா அங்கால பக்கம் போக நாங்களும் நல்லூரான் தரிசனத்துக்கு போக ரெடியாகிடுவம்…
( 1983 க்கும் 1990 க்கும இடைப்பட் காலத்தில் நடந்த அப்பாக்களின் தடை தாண்டிய பயணங்கள்)
.
.
.
.
வைத்திய நிபுணர் கோபிசங்கர், யாழ்ப்பாணம்.
சுவடுகள் தொடரின் முன்னைய பதிவுகள்
சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்
சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்