பிரபல்யங்கள் என்றாலே பிரச்சினையில்தான் அதிகமாக சிக்குவர். இதற்கு காரணம் அவர்கள் சமூகத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பதனால் அவர்களை அனைவரும் அறிவர்.
அவர்கள் சிறு தவறு செய்தாலும் உடனே அது பூதாகரமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஊடகங்கள் பெரிது படுத்திவிடும். ஆனாலும் நாம் அச்சப்படும் பல மிக மோசமான பயங்கரமான விடயங்களில் சில பிரபல்யங்கள் மிக எளிதாக ஈடுபட்டுவிட்டு அதிலிருந்து தப்பித்தும் விடுகின்றனர்.
அந்தவகையில் இந்திய ஹிந்தி திரை உலக பிரபலங்கள் மானை வேட்டையாடியும் குடிபோதையில் விபத்துக்களை ஏற்படுத்தியும் குண்டு வைப்புகளில் ஈடுபட்டதனையும் அதிலிருந்து தப்பித்தமையையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் நடந்த சொகுசு கப்பல் விருந்தில் கலந்து கொண்டபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்ரோடு சிறையில் ஆர்யன் கானும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கானின் பிணை மனு மீது இரண்டு நாட்கள் விசாரணை நடந்தது.
நடிகர் சல்மான்கான் குடிபோதையில் காரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் ஷாருக் கான் மகனுக்காக ஆஜரானார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் வாட்ஸ்அப் செட்டிங் செய்த விபரங்களை சுட்டிக்காட்டி சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஆர்யனுக்குத் தொடர்பு இருப்பதாகவும், பல ஆண்டுகளாக ஆர்யன் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் வாதிட்டார்.
ஆனால் ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய், “ஆர்யனிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வாட்ஸ் அப் செட்டிங் விபரங்கள் அடிப்படையில்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நண்பர்களுடன் செட்டிங் செய்யும்போது சுருக்கமான வார்த்தைகளில் பேசுவதை ஆர்யன் வழக்கமாக கொண்டுள்ளார். அதனை இத்தோடு தொடர்புப்படுத்த முடியாது என்று வாதிட்டார்.
இரு தரப்புக்கும் இடையே நடந்த காரசார வாக்குவாதம் முடிவடைந்து உடனே தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் ஷாருக்கான் தரப்பு மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆர்யன் சிறையில் வழங்கப்படும் உணவைச் சாப்பிட மறுத்து வருகிறார். அவருக்குச் சிறையில் காலை உணவாக அவல் உப்புமாவும், கேசரியும் வழங்கப்படுகின்றன. மதியம் சப்பாத்தி, கூட்டு, பருப்புக் குழம்பு, சாதம் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆர்யன் கான் சிறை உணவை சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகிறார்.
சிறை கேண்டீனில் கிடைக்கும் பிஸ்கட்களை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு தன்னிடம் இருக்கும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்யன் போன்றே அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் சிறை உணவை சாப்பிட மறுத்து வருகின்றனர்.
நீதிமன்றம் இன்னும் ஆர்யனுக்கு வீட்டுச்சாப்பாடு கொடுக்க அனுமதிக்கவில்லை. அத்தோடு ஓரிரு நாட்களில் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் ஷாருக்கான் தரப்பு வீட்டுச்சாப்பாடு கொடுக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இதுவரை அனுமதியும் கேட்கவில்லை.
ஆர்யன் பிரச்சினையால் ஷாருக் கான் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கிறார். மகன் கைதால் ஷாருக் கான் சரியாக சாப்பிடாமல் உறக்கம் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அவரின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
வழக்கமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கலந்து கொள்ளும் போட்டிகளில் ஷாருக் கான் ஆஜராவது வழக்கம். ஆனால் இம்முறை மகன் கைது செய்யப்பட்டு இருப்பதால் ஷாருக் கான் மட்டுமல்லாது அவரது மனைவி கெளரிகானும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார்.
ஷாருக் கானின் மகன் செய்தது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இது அரசியல் நோக்கமா என்ற சந்தேகமும் எழுகின்றது. ஆயினும் போதைப்பொருள் பாவிப்பது மட்டும் அல்ல விற்பனை செய்வது மிக பெரிய சமூக அழிவுக்கு காரணமாக அமையும் என்பதே உண்மை.