கதாநாயகனாக நடித்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.
யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸ் நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சத்யராஜ் பேசும்போது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், டார்லிங்கின் டார்லிங் பூஜா. கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.
நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.
பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இன்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி’ என்றார்.