உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
இந்த நோய் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. 8 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நோய் பாதிப்புக்குள்ளான ஒரு வாலிபர் கேரளாவில் உயிரிழந்தும் உள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவில் இந்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால்:-
- குரங்கு அம்மை பாதித்த நபர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
- கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு, தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வர வேண்டும்.
- நோய் தாக்கிய நபர் அருகே செல்கிறபோது வாயை நன்றாக மறைக்கிற விதத்தில் முககவசமும், கைககளில் கையுறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.
- குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபர் இருப்பிட சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
குரங்கு அம்மை பரவலைத் தடுக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றால்-
- குரங்கு அம்மை பாதித்த நபரின் படுக்கை, உடைகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
- குரங்கு அம்மை பாதித்தவர்களின் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளை துவைக்கக்கூடாது.
- குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.
- குரங்கு அம்மை பாதித்த நபர்களை, பாதிப்பு இருக்கலாமோ என சந்தேகிக்கிற நபர்களை களங்கப்படுத்தக்கூடாது. தவறான தகவல்களை, வதந்திகளை நம்பக்கூடாது.
நன்றி | மாலை மலர்