8
வானம் பார்த்திருந்து
மழையை தாகத்தோடு அருந்தி
கிழங்குகள் வேரோடி
நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது
காந்தள்க் கொடி.
எதற்காக இந்தப் பூக்கள்
வருடம் தோறும்
கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?
ஒரு சொட்டு கண்ணீர் விடவும்
ஒரு விளக்கு ஏற்றவும்
மறுக்கப்படுகையில்
எதுவும் இல்லையென
எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்
அனல் கனக்கும் தாயின் கருப்பையை
ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள்
தாயின் கனவு வண்ணமாய்
தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை
யாரால் தடுக்க இயலும்?
-தீபச்செல்வன்