ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு நிமிடத்தை புகைபிடிக்காமலேயே இழக்கிறார்களாம்.
அதனால் புகைப்பிடிக்காதீர்கள். புகை பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள். என்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு விழாவில் மருத்துவர்கள் தெரிவித்தனர். மே மாதம் 31 ஆம் திகதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிகரெட்டிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. இதில் ஐம்பது நச்சுப்பொருள்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை. தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள், தன்னுடைய நண்பர்களிடமிருந்து அவர்கள் புகைத்த சிகரெட்டை வாங்கி புகைப்பவர்கள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்று எல்லை வகுத்துக் கொண்டு புகைப்பவர்கள் என அனைவருக்கும் பக்கவாதம், மாரடைப்பு, பார்வை திறன் குறைபாடு, வாய், நுரையீரல், குடல் மற்றும் மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் ஆயுள் பாதியாக குறையும். புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளும், நோய்களும், புகைபிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். இன்றைய திகதியில் தெற்காசியா முழுவதும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்நிலை மேலும் குறையவேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நன்றி | வவுனியா நெற்