பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டார் நட்சத்திர பட்டியலில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் தயாராகி, பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழா விடுமுறை தினத்தை குறிவைத்து முன்னணி நட்சத்திர நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகிறது.
இதுவரை படத்திற்கு மூன்று விதமான போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, மேலும் இரண்டு புதிய போஸ்டர்களையும், படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கான புகைப்படங்களையும் வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள முன்னணி நட்சத்திர நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சமுத்திரக்கனி, வீரா, பிரேம் குமார், ஜான் கொக்கன், மமதி சாரி, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
வங்கி கொள்ளையை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பே வியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி எனும் நிறுவனத்தின் சார்பில் பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
அண்மையில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் பட குழுவினர், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
பொங்கல் திருவிழா தருணத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் அனைத்து போஸ்டர்களிலும் அஜித்குமார் தாடியுடனும், கையில் துப்பாக்கியுடனும் தோன்றுவது ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
குறிப்பாக ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் கையில் துப்பாக்கி பிடித்திருப்பதும், ‘துணிவு’ படத்தில் அஜித் கையில் துப்பாக்கி பிடித்திருப்பதையும் ஒப்பிட்டு, ரசிகர்கள் இணையத்தில் பல விதமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதனிடையே ‘துணிவு’ திரைப்படம் எந்த திகதியில் வெளியாகிறது? என்பது குறித்தும், தமிழில் மட்டும் வெளியாகிறதா? அல்லது தமிழுடன் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகிறதா? என்பது குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால், திரையுலக வணிகர்கள் கவலையுடன் தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.