“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் எப்படிப் போட்டியிடுவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானிக்க முடியாது. அவர்கள் எங்களைத் தனித்துப் போட்டியிடச் சொல்ல முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் கூட்டாதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து தங்களை இவ்வாறு போட்டியிடுவதற்கு நிர்ப்பந்திக்குமாக இருந்தால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டமைப்பு அமைத்துப் போட்டியிடவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேர்தலில் பரந்துபட்ட கூட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு பங்காளிக் கட்சிகளின் (ரெலோ, புளொட்) தலைவர்களால் அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.