கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவின்போது மீனவர் பேச்சுக்கள் என்ற பெயரில் அரசியல் கலந்துரையாடல்கள் நடைபெறுவதற்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் இடமளிக்கக் கூடாது என்று வடக்கு மீனவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடற்பரப்பில் அனுமதிபெற்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே மேற்படி கோரிக்கையையும் வடக்கு மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
இம்முறை கச்சதீவு திருவிழாவின்போது வடக்கு மீனவர்களுடன் தொடர்பில்லாத சிலரை அழைத்துச் சென்று, இந்திய மீனவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும், அரசியல் ரீதியிலான நகர்வுகளுக்காகவே இவ்வாறு செய்யப்படுவதாகவும் வடக்கு மீனவர்கள் நேற்றுக் குறிப்பிட்டனர்.
எனவே, கச்சதீவில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தவிர்ந்த ஏனையவற்றை அனுமதிக்கக் கூடாது என்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களை அவர்கள் கோரியுள்ளனர்.