டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ”கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம்.
அதுபோலவே இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்” என்றார்.