செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிள்ளையான் விடுதலையில் நீதி மோசடி! – புட்டுப் புட்டு வைத்தார் சுமந்திரன்

பிள்ளையான் விடுதலையில் நீதி மோசடி! – புட்டுப் புட்டு வைத்தார் சுமந்திரன்

6 minutes read
“ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு) முதலில் பிணை வழங்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையில் மோசடி இடம்பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு எதிரான இந்த மாபெரும் துரோகத்துக்கு உடந்தையாக இருந்து இன்னும் பணியாற்றும் நீதிபதிகளைப் பற்றி நான் கவலைப்படுகின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனக்கு முன்னர் பேசிய உறுப்பினர் கர்மா என்று ஒன்று உள்ளது, இந்தப் படுகொலைகளுக்கு (ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு) காரணமானவர்கள் இறுதியில் அதற்காகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி முடித்தார். அவருடைய வார்த்தைகள் ஏற்கனவே உண்மையாகிவிட்டன. இதனைப் பொறியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டியவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த நாட்டு மக்களால் அந்த ஆசனத்தில் இருந்து துரத்தப்பட்டார். எனவே, கர்மா அவருடைய நம்பிக்கையின்படி உள்ளாதாகவே கருதலாம்.

எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அது இந்த நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும் என்று காரணம் குறிப்பிட்டு அதை அனுமதிக்க முடியாது என்று கூறிய பலர் இப்போது சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றனர். அதுவும் ஒரு திருப்பம்தான்.

உள்நாட்டுப் போரின் போது நடந்தவை எனக் கூறப்படும் அத்துமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மட்டுமே சுதந்திரமான விசாரணையாக இருக்கும் என்று நாங்கள் கூறியபோது, அவர்கள் “இல்லை, எங்கள் அரசமைப்பு அதை அனுமதிக்கவில்லை” என்று கூறினார்கள். அரசமைப்புச் சட்டம் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

உண்மையில், நீதி மற்றும் அரசமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை சர்வதேச நீதிபதிகள் விசாரிப்பதற்கான தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அது அரசமைப்புக்கு எதிரானது என்று அவர் அப்போது நினைக்கவில்லை. இது அரசமைப்புக்கு எதிரானது என்று இன்றும் பலர் நினைக்கவில்லை. இது அரசமைப்புக்கு எதிரானதே அல்ல.

உள்நாட்டுப் போர் தொடர்பாக, சர்வதேச விசாரணைகள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றுள்ளன. நிபுணர்கள் குழு அறிக்கை உள்ளது. மற்றும் (ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடத்திய) இலங்கை பற்றிய விசாரணை உள்ளது. அவை பற்றிய அறிக்கைகள் உள்ளன.

2015 இல் ஒரு கலப்பின நீதிமன்றத்துக்கு அரசு ஒப்புக்கொண்டது. பின்னர், அந்த ஒப்புதலில் இருந்து பின்வாங்கி, நாங்கள் எங்கள் இணை அனுசரணையை திரும்பப் பெறுகின்றோம் என்று கூறியது. அரசும் மற்றொரு தரப்பினரும் மோதும் விடயத்தில் கூட, பிணக்குப்படும் ஒரு தரப்பாக அரசு இருப்பதால் அதைத் தீர்த்து வைப்பதற்கு சர்வதேச விசாரணை மட்டுமே சாத்தியமாகும் என்பதனால் நான் இந்த விடயங்களை நினைவுபடுத்துகின்றேன்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விடயத்துக்கு வருவோமானால், அது தொடர்பில் 2019 ஒக்டோபரில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அதன் கண்டுபிடிப்புகளை அறிக்கை செய்தபோது, இப்போது சொல்லப்படுவதை எல்லாம் நாங்கள் மிகவும் குறிப்பாக அதில் சுட்டிக்காட்டியிருந்தோம். அதன் இறுதிச் சுருக்கக் குறிப்பில் கூட, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வலுவான தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பை (எதிர்பார்ப்பை) ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது (இந்தத் தாக்குதல்) மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பினோம். எல்லாமே அதை நோக்கியே இருந்ததால் நாங்கள் அப்படி அதில் சொன்னோம். ஆனால், எங்களிடம் உறுதியான ஆதாரம் இல்லை. ஆனால், அனைத்து சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களும் அதை நோக்கியே சுட்டிக்காட்டின.

இப்போது அது மெதுவாக ஆனால் நிச்சயமாக கட்டவிழ்ந்து வெளிப்படுத்தப்படுகின்றது. மீண்டும் சனல் 4 அம்பலப்படுத்தல்களுக்கு வருவோமானால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக சனல் 4 வெளிப்படுத்தியவற்றை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று நான் சொல்ல வேண்டும். இதே சனல் 4, பல வருடங்களுக்கு முன்பு, ‘கொலைக் களம்’ மற்றும் ‘கொலைக் களம் 2’ என்ற இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. அதைப் பற்றி நிறைய விடயங்கள் கூறப்பட்டன. ஆனால் அதை மறுத்தவர்கள் கூட இப்போது வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை நம்புகின்றார்கள்.

நாங்கள் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கும் பல விடயங்கள், அங்கு (சனல் 4 இல்) சொல்லப்படும் கதையுடன் பொருந்தக்கூடிய பல நிகழ்வுகள் இருப்பதால், அது சொல்வது உண்மை என்பதை நாங்கள் அறிவோம். மேலும் சனல் 4 வெளிப்படுத்தலில் இல்லாத ஒரு விடயத்தை (மேலதிகமாக) நான் குறிப்பிட விரும்புகின்றேன். அது, ஆஸாத் மௌலானாவின் குரல் பதிவு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளவை. ஆனால், அதைச் செய்வதற்கு முன், நான் தோன்றிய (ஆஜராகிய) சில விடயங்களில் எனது தலையீடு குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதியின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் நான் வெளிப்படுத்த வேண்டும்.

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு) பிணை வழங்கப்பட்ட போது நான் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். பாதிக்கப்பட்ட தரப்புக்காக நான் ஆஜராகி, நவம்பர் 2020 இல் பிணை வழங்கப்படுவதை எதிர்த்தேன். எனவே, இந்த விவகாரத்தில் எனக்கு சில தொடர்புகள் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நன்னடத்தை விதியின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் நான் அதை வெளிப்படுத்த வேண்டும். நான் நிலையியல் கட்டளை 83 (1) ஐயும் குறிப்பிட வேண்டும், அதில் “நீதிபதிகள் உட்பட சில பிரமுகர்களின் தனிப்பட்ட நடத்தைகள் நாடாளுமன்றத்தில் உரையில் குறிப்பிடப்படக் கூடாது” என்று கூறப்படுகின்றது. நான் அதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன், ஏனென்றால் நான் சில நடத்தைகளைக் குறிப்பிடப் போகின்றேன். ஆனால் அது தனிப்பட்ட நடத்தை அல்ல. ஆனால், அங்குள்ள நீதிபதிகளின் அதிகாரபூர்வமான நடத்தையை நான் குறிப்பிடப் போகின்றேன். எனவே, நான் எந்த நிலையியல் கட்டளையையும் மீறவில்லை.

பிள்ளையானுக்கு முதலில் பிணை வழங்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டமை எப்படி என்பதை ஆஸாத் மௌலானா மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவர் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். நான் அவற்றை இங்கே குறிப்பிடலாம், ஆனால் அவர்களின் உரித்துக் கருதி நீதிபதிகளின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. சக குற்றவாளி ஒருவரின் வாக்குமூலம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையை அடுத்து, நீதிபதி ஒருவருடன் தானும் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது என்று அவர் கூறுகின்றார். (வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டமையை ஆட்சேபித்து) மேன்முறையீடு செய்யப்படும் என்றும், மேலும் அந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரம் என்று நீதிபதி நிராகரிப்பார் என்றும் அங்கு திட்டமிடப்பட்டது என்றார் அவர். அது உண்மையில் நடந்தது. அவர் குறிப்பிடும் நீதிபதியின் பெயரே அந்த உத்தரவை வழங்கிய நீதிபதி ஆவார்.

சந்தர்ப்பவசமாக, இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அந்த நீதிபதி – இது மிகவும் பாரதூரமான விடயம் – சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இலஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அப்போது அவர் நீதிபதியாக அமர்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அரசு மாறியதும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்த அந்தக் குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது. பின்னர் பதவி உயர்வு பெற்று தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் உள்ளார். இது நாட்டில் நடக்கும் அதிர்ச்சிகரமான விடயம் அல்லவா? அவர்தான் திட்டமிட்டு மேற்படி கூட்டத்தை நடத்தியிருக்கின்றார். ‘இந்த வாக்குமூலத்தை ஏற்க முடியாது என்று தீர்ப்பளிப்பேன், அதன்பிறகு, பிள்ளையானுக்கு எதிராக வழக்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டமா அதிபர் சொல்லலாம்’ என்று கூறியிருக்கின்றார். ஆனால், சட்டமா அதிபர் அப்படி வெளிப்படையாக (பிள்ளையானை விடுவிப்பதற்கு) எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு நான் தலைசாய்த்து மரியாதை செலுத்த வேண்டும். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோனும் இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, இவற்றில் சில உண்மைகள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் மேல் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு நீதிபதி முன் ஆஜராகும்போது – மேலும் அந்தச் சிறப்பு நீதிபதி எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்று ஆஸாத் மௌலானா கூறுகின்றார். ஏனெனில், அங்கு அமர்ந்திருந்த நீதிபதி இதனை (இந்த ஏற்பாடுகளுக்கு) இணங்க மறுத்தமையால், (இக்கட்டைத் தவிர்ப்பதற்கு) அவருக்கு இடமாற்றம் தேவைப்பட்டதால், அவர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவர் அவ்வாறே கொழும்புக்கு மாற்றப்பட்டார் என்பதும் எங்களுக்குத் தெரியும். பின்னர், இந்த விடயத்தைச் செய்வதற்கு அப்போது வவுனியாவில் அமர்ந்திருந்த மற்றுமொரு நீதிபதியை அணுகினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக அந்த நீதிபதி ‘இந்த விடயத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கத்தோலிக்கர், இந்து அல்லது முஸ்லிம் நீதிபதி பிள்ளையானை விடுவித்தால் சந்தேகம் ஏற்படும், எனவே தமிழ் கத்தோலிக்க நீதிபதியைக் கண்டுபிடிப்போம்’ – என்று கூறியிருந்தார். தமிழ் கத்தோலிக்க நீதிபதி ஒருவருடன் பேசினர். அவர் இந்தப் பிணை மனுவை விசாரிப்பதற்காக மட்டக்களப்புக்கு விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த வகையில்தான் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் அந்த வழக்கு எடுக்கப்பட்டது.” – என்றார் சுமந்திரன் எம்.பி.

இந்தச் சமயத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குறுக்கிட்டார். ”என்னுடைய பெயரை சுமந்திரன் அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றார். சுமந்திரன் நீதிமன்றத்தைப் பற்றியும் என்னுடைய வழக்கைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றார். என்னை இந்த நாட்டின் நீதிமன்றம் விடுத்துள்ளது” – என்றார்.

அதற்குப் பதிலளித்து சுமந்திரன் எம்.பி. தொடர்ந்து பேசினார்.

அவர் கூறியவை வருமாறு:-

“எனக்கு அது தெரியும், அதனால்தான் (உண்மைகளைத்) தெளிவுபடுத்துகின்றேன். இது ஒழுங்குப் பிரச்சினையல்ல. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், அந்த விசேட நீதிபதி முன்னிலையில் நான் அன்று ஆஜராகியிருந்தேன். மேலும் நான் பிணை வழங்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். அவர் எதிர்பார்க்கவில்லை. நான் ஆஜராக அந்தஸ்து இல்லை என்று கூறினார். இது எல்லாம் பதிவில் இருக்கின்ற விடயம். பின்னர் அவர் வழக்கை ஒத்திவைத்தார். சுமார் அரை மணி நேர இடைவெளி எடுத்தார். ஒருவேளை சில தொலைபேசி அழைப்புகளைச் செய்திருக்கலாம். பிறகு வந்து “ஆ… சரி நீங்கள் உங்கள் சமர்ப்பணங்களைச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, பிணை வழங்கப்பட்டது. அன்று மட்டக்களப்பு நீதிமன்ற அறையை விட்டு நாங்கள் வெளியேற முடியவில்லை. (சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து குறுக்கிட்டார் ) அங்கு அவர் இன்னமும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார். மக்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர். நாங்கள் வெளியே செல்வதற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியிருந்தது. அன்று நீதிமன்ற வாளாகம் எப்படி இருந்தது என்பதை சனல் 4 காட்டியது. அவர் (பிள்ளையான்) வெளியே வந்ததும் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று அவர் வெளியே வருவதை முற்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்பது, அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம், அவரை வரவேற்ற முறைமை என்பன காட்டுகின்றன. இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டன.

இப்படி நடந்த பல விடயங்களுக்கு நானே சாட்சி. அதனால்தான் பிள்ளையான் பற்றி எதுவும் பதிவிடாமல் மற்றைய விடயங்களை இங்கே பதிவு செய்கின்றேன். பிள்ளையானைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர் செய்த கொலைகளின் பட்டியலை மிக விரைவில் வெளியிடப் போகின்றார் என்று ஒருவர் கூறியுள்ளார். அவரைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை,. ஆனால், மக்களின் நம்பிக்கைக்கு எதிரான இந்த மாபெரும் துரோகத்துக்கு உடந்தையாக இருந்து இன்னும் பணியாற்றும் நீதிபதிகளைப் பற்றி நான் கவலைப்படுகின்றேன். நன்றி!” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More