அகில இலங்கை ரீதியாக தமிழ்த் தினப் போட்டியில் சாதனையீட்டிய மாணவர்களுக்கு தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
ஈழத்து எழுத்தாளரும் தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவருமான தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன் போது அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பேச்சுப் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் பா. சயந்தன், இலக்கிய விமர்சனப் போட்டியில் இரண்டாம் நிலையைப் பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவி சி. சிந்துஜா மற்றும் வாசிப்புப் போட்டியில் இரண்டாம் நிலையைப் பெற்ற கிளிநொச்சி பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலை மாணவன் சி. ரனுசன் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் நாடகக் கலைஞருமான அருணாசலம் சத்தியானந்தன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
ஏற்புரைகளை ஆசிரியர் கனகரட்ணம் செந்தூரன் மற்றும் மாணவன் சயந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் நன்றியுரையை தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கி. அலக்ஷென் வழங்கினார்.