இஸ்ரேல்-ஹமாஸ் போரை “கூடிய விரைவில்” முடிவுக்கு கொண்டுவருவதற்கு தாக்குதலில் ஈடுபடும் தரப்பினருக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்துள்ளார்.
செவ்வாயன்று கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், இளவரசர் வில்லியம் இதனைக் கூறியுள்ளார்.
ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலினால் செலுத்தப்பட்ட பயங்கரமான மனித உயிர்களின் விலை குறித்து தான் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நான், பலரைப் போலவே, சண்டையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
“காசாவிற்கு மனிதாபிமான ஆதரவை அதிகரிக்க வேண்டிய அவசிய தேவை உள்ளது. உதவி பெறுவதும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதும் முக்கியமானதாகும்.
சில சமயங்களில், மனித துன்பங்களின் உச்ச அளவை எதிர்கொள்ளும் போதுதான் நிரந்தர அமைதியின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசியுங்க : தந்தையை ஆதரித்தவர்களுக்கு இளவரசர் வில்லியம் நன்றி
இந்த நிலையில், இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி, சண்டையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இளவரசர் வில்லியமின் அழைப்பிற்கு நேரடியான ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டார்.
“நிச்சயமாக இஸ்ரேலியர்கள் சண்டையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள், 134 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன் அது சாத்தியமாகும். மேலும், ஒக்டோபர் 7 அட்டூழியங்களை மீண்டும் செய்ய அச்சுறுத்தும் ஹமாஸ் பயங்கரவாத இராணுவம் அகற்றப்பட்டதும் யுத்தம் முடிவுக்கு வரும்.”
“பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு, இங்கிலாந்து இளவரசர் விடுத்த அழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம். ஒக்டோபர் 11 முதல் ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தும், அவற்றிற்கு எதிரான இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தியும் வெளியிட்ட அவரது அறிக்கையை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.