தயாரிப்பாளரும், நடிகருமான ஆர். கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘காடுவெட்டி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும், வன்னியர் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தின் முன்னணி பிரதிநிதிகளின் முன்னிலையிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
அறிமுக இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காடுவெட்டி’ திரைப்படத்தில் ஆர். கே. சுரேஷ், இயக்குநரும், நடிகருமான சுப்ரமணிய சிவா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஆதிரா சங்கீர்த்தனா, விஸ்மயா, ஜெ எஸ் கே கோபி, அகிலன், ஷர்மிளா, ராகுல் தாத்தா, ரத்னகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘வணக்கம் தமிழா’ சாதிக் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரும், மறைந்த அரசியல்வாதியுமான காடுவெட்டி குரு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மஞ்சள் ஸ்க்ரீன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. சுபாஷ் சந்திரபோஸ், கே. மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம், ஜி. ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மகேந்திரன் பேசுகையில், ” காடுவெட்டி குரு அவர்களின் நினைவை போற்றும் வகையில் இப்படத்தின் கதையை இயக்குநர் சோலை ஆறுமுகம் உருவாக்கியிருக்கிறார். கதையை உருவாக்கி விட்டு படமாக தயாரிப்பதற்கு முன் எம்மை சந்தித்து உதவி செய்யுமாறு கோரினார். பிறகு நானும் என்னுடைய நண்பர்களும் ஒரு குழுவாக இணைந்து அவர் சொன்ன பட்ஜட்டிற்கு உதவினோம். பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த உதவி கோரினார். அதன் போதும் உதவினோம். படம் நிறைவடைந்து தணிக்கை குழுவிற்கு சென்றது. அதன் போதும் உதவி கோரினார். அதன் போதும் உதவினோம். தணிக்கை குழுவில் இப்படத்திற்கு 31 இடங்களில் ‘கட்’ கொடுக்கப்பட்டது. ‘ஐயா பெரியவரே’, ‘மாவீரர்’ என்ற சொல் இடம் பெறக் கூடாது என தணிக்கை குழுவினர் வலியுறுத்தினர். அதன் பிறகு இயக்குநர் சோலை ஆறுமுகம் மற்றும் அவரது குழுவினர் தணிக்கை குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அதன் பிறகு 15 இடங்களில் மட்டும் கட் கொடுத்து தணிக்கை சான்றிதழை வழங்கி இருக்கிறார்கள். விரைவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.
படத்தின் இசையமைப்பாளரான வணக்கம் தமிழா சாதிக் பேசுகையில், ” இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘திரௌபதி’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் தான் காடுவெட்டி திரைப்படம் உருவானது. தற்போதைய திரைப்படத்தில் பாடல்கள் இடம் பெறுவது குறைவு என்றாலும், இந்த திரைப்படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. அனைத்தும் ரசிகர்களால் வரவேற்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.