ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (06) நடைபெற்ற 17ஆவது இண்டியன் ப்றீமியர் லீக் அத்தியாயத்தின் 19ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.
இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் தனது நான்காவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் மீண்டும் முதலாம் இடத்துக்கு முன்னெறியது.
இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டியில் முதலாவது சதத்தை விராத் கோஹ்லி குவித்த போதிலும் அதே போட்டியில் ஜொஸ் பட்லர் குவித்த சதத்தினால் அது வீண்போனது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
அதிரடி வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் முதலாவது ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் றோயல்ஸ் நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், ஜொஸ் பட்லர், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் 86 பந்துகளில் 148 ஓட்டங்களைப் பகிர்ந்து ராஜஸ்தான் றோயல்ஸைப் பலப்படுத்தினர்.
சஞ்சு செம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் புகுந்த அதிரடி வீரர்களான ரியான் பராக் (4), த்ருவ் ஜுரெல் (2) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (164 – 4 விக்.)
ஆனால், ஜொஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.
58 பந்துகளை எதிர்கொண்ட ஜொஸ் பட்லர் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஷிம்ரன் ஹெட்மயர் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரீஸ் டொப்லே 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், விராத் கோஹ்லியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் விராத் கோஹ்லி தனி ஒருவராக 113 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார்.
72 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 12 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினார்.
ஐபிஎல் போட்டிகளில் விராத் கோஹ்லி பெற்ற 8ஆவது சதம் இதுவாகும்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மொத்த எண்ணிக்கையில் உதிரிகள் உட்பட மற்றைய நால்வரின் பங்களிப்பு வெறும் 70 ஓட்டங்களாகும்.
விராத் கோஹ்லியும் பவ் டு ப்ளெசிஸும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 84 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பவ் டு ப்ளெசிஸ் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தபோது விராத் கோஹ்லி 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அதன் பின்னர் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்த 68 ஓட்டங்களில் விராத் கோஹ்லி 41 ஓட்டங்களைப் பெற்றமை விசேட அம்சமாகும்.
க்ளென் மெக்ஸ்வெல் (1), சவ்ரவ் சௌஹான் (9), கெமரன் க்றீன் (5 ஆ.இ.) ஆகியோர் மிகக் குறைந்த ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்த்ர சஹால், இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 4 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந் நிலையில் இந்த வருடம் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முன்னிலையில் இருக்கும் யுஸ்வேந்த்ர சஹாலுக்கு ஊதா நிற தொப்பியை விராத் கோஹ்லி அணிவித்தார்.